புற்றுநோய் தொற்றுநோயா?

புற்றுநோய்... உலக மக்களை உலுக்கி எடுக்கும் ஒரு கொடிய நோய். ஒரு சில புற்றுநோய்களை குணப்படுத்தி விடலாம் என்றாலும், இதுவரை புற்றுநோயை முழுமையாக குணமாக்க எந்த மருந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. இதைபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 7ம் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இந்தியாவில் ஆண்டுதோறும் 12 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 7 லட்சம் பேர் உயிரிழப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகளவில் 5 லட்சம் பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயாலும், 5 லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோயாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள் அதிகளவில் உயிரிழக்கும் நாடுகளின் பட்டியலிலும் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. தமிழகம், கேரளா, டெல்லி ஆகிய 3 மாநிலங்களில்தான், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிகளவில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

விழிப்புணர்வு மற்றும் மருத்துவ சோதனைகள் மூலம் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதன் மூலம் உயிரிழப்பை வெகுவாக குறைக்க முடியும். இந்தியாவில் தினசரி 2 ஆயிரம் பெண்களுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது; இவற்றில் 1,000க்கும் அதிகமான பெண்கள் புற்றுநோய் முற்றிய நிலையிலேயே தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதை அறிந்து கொள்கின்றனர்.பெண்கள் மத்தியில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை தீவிரப்படுத்துவதன் மூலமே உயிரிழப்புகளை தடுக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நிறைய பேர் புற்றுநோய் ஒரு தொற்றுநோய் என நினைக்கின்றனர். இது தவறு. ஆண்களுக்கு நுரையீரல், வயிறு, குடல், உணவுக்குழாய், ப்ராஸ்ட்ரேட் சுரப்பிகளிலும், பெண்களுக்கு மார்பகம், நுரையீரல், வயிறு, குடல், கர்ப்பப்பை வாய் ஆகியவற்றிலும் அதிகமாக புற்றுநோய் வருகிறது.

நம் உடல் பலவகையான உயிரணுக்களால் ஆனது. உடல் வளர, ஆரோக்கியமாக இருக்க, இந்த உயிரணுக்கள் வளர்ந்து பெருகி, மேலும் பல உயிரணுக்களை உருவாக்குகின்றன. இந்தச் சீரான பணியில் ஏதேனும் தவறு ஏற்படும்போது, புதிய உயிரணுக்கள் அதிகமாக உருவாகி விடுகின்றன. பழைய உயிரணுக்கள் அவற்றின் கால அளவை மீறி உயிர் வாழ்ந்து விடுகின்றன. இந்த அதிகப்படியான உயிரணுக்கள் உடலில் கட்டியாகத் தோன்றுகின்றன.எல்லாக்கட்டிகளுமே புற்றுநோய்க் கட்டிகள் அல்ல. புற்றுநோய் அல்லாத கட்டிகளால் உயிருக்கு ஆபத்து இல்லை. இத்தகைய கட்டிகளை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினால் மீண்டும் தோன்றுவதில்லை.சிகிச்சையற்ற நிலையில் புற்றுநோய் உயிரணுக்கள் கட்டுப்பாடின்றி வளர்கின்றன. அவை சுற்றியுள்ள மற்ற திசுக்களை ஆக்கிரமித்து அழிக்கின்றன. ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகின்றன. இதனால், உறுப்பின் இயக்கங்கள் பாதிக்கப்பட்டு இறப்பு ஏற்படுகிறது. சில வைரஸ்களும், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. உதாரணமாக எச்.ஐ.வி, ஹெபடைட்டிஸ் போன்றவை.

அறிகுறிகள் : உடலில் புற்றுநோய் ஏற்படும் பாகத்தைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடும். குரலில் திடீர் மாற்றம், தொடர் இருமல், குரலில் கரகரப்பு, முழுங்குவதில் தொடர் சிரமம், தொண்டையில் அடைப்பு போல் தோன்றுதல், நாக்கை அசைப்பதில் சிரமம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, உடலில் கட்டி இப்படி பலவற்றை அறிகுறிகளாக கூறலாம். பெண்களுக்கு மார்பகங்களில் கட்டி, மாதவிடாயின் போது இயல்பைவிட அதிக ரத்தப்போக்கு, இறுதி மாதவிடாய் நின்ற பிறகும் ரத்தப்போக்கு உள்ளிட்டவைகளை கூறலாம்.புற்றுநோயைத் தடுக்க உத்திரவாதமான முறை ஏதும் இல்லை. ஆனால், சரியான வாழ்க்கைமுறையின் மூலம் நோய் ஏற்படும் வாய்ப்பை பெருமளவில் குறைக்க முடியும். குறிப்பாக, சிகரெட், புகையிலை பழக்கவழக்கங்கள் கண்டிப்பாக இருக்கக்கூடாது.

Tags :
× RELATED கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு அணையில் குளிக்க தடை