நாசரேத் அருகே பராமரிப்பின்றி சேதமடைந்த மின் கம்பங்கள் விரைவில் மாற்றி அமைக்கப்படுமா?

நாசரேத், நவ. 7: நாசரேத் அருகே பராமரிப்பின்றி சேதமடைந்த சிமென்ட்டால் ஆன மின் கம்பங்கள் விரைவில் மாற்றி அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் உள்ளனர். நாசரேத்  அருகே உடையார்குளம் பகுதியில் உள்ள பால்பண்ணை தோட்டத்தில் கால்நடை விவசாயிகள், ஏராளமான ஆடுகள், மாடுகள் வளர்த்து வருகின்றனர். மேலும் வாழை சாகுபடியும் செய்து வருகின்றனர்.  இதில் சுமார் 15க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே அப்பகுதியில் சிமென்டால் அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இதனால் சேதமடைந்த மின்கம்பங்கள் அரிக்கப்பட்டுள்ளதோடு எந்நேரத்திலும் கீழே விழும் ஆபத்தான நிலை நிலவுகிறது.

Advertising
Advertising

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மோகன் கூறுகையில், ‘‘இங்கு சேதமடைந்த நிலையில் உள்ள மின் கம்பங்களை  மாற்றி அமைக்குமாறு மின் அலுவலகத்தில்  பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த வகையில் சேதமடைந்த பிரதான மின் கம்பத்தில் இருந்து தான்  வயல்களுக்கு மின்சாரம் செல்கிறது. இது கீழே விழும் பட்சத்தில் மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது’’ என்றார். எனவே, இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி, உடையார்குளத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள மின் கம்பங்களை  மாற்றிவிட்டு அவற்றுக்குப் பதிலாக புதிய மின்கம்பங்கள் அமைக்க முன்வரவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Related Stories: