சாத்தான்குளம் அருகே நரையன்குடியிருப்பில் புதிய குளத்துக்கு நீர்வழிப்பாதை அமைக்கும் பணி தொடக்கம்

சாத்தான்குளம், நவ. 7: நரையன்குடியிருப்பில் புதியதாக அமைக்கப்பட்ட புதிய குளத்துக்கு நீர் வழிப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூர் ஊராட்சிக்குள்பட்ட நரையன்குடியிருப்பில் புதியதாக குளம் அமைக்க அதே ஊரைச் சேர்ந்த விவசாயிகள் வரதராஜன், அசோகன், தனசேகரபாண்டியன், அர்சுனன் ஆகியோர் தானமாக 3ஏக்கர் நிலம் வழங்கினர். இதையடுத்து ஜல்சக்தி அபியான், ஊருக்கு நூறு கை திட்டத்தின்கீழ் குளம் அமைக்கும் பணியை கலெக்டர் சந்தீப்நந்தூரி 2மாத்திற்கு முன்பு தொடங்கி வைத்தார். குளத்திற்கு நீர் வழிப்பாதை அமைக்கவில்லையென புகார் எழுந்தது. கலெக்டர் குளத்தை பார்வையிட்டு நீர்வழிப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் முதலூர் ஊரணியில் இருந்து புதிய குளத்துக்கு நீர் வழிப்பாதை அமைக்க வேண்டும் என ஒன்றிய ஆணையாளர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வியிடமும் முறையிட்டனர். அதன்படி ஆய்வு மேற்கொண்டு நீர் வழிப்பாதை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான பணி நேற்று தொடங்கியது. இப்பணியை சாத்தான்குளம் ஒன்றிய ஆணையாளர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் ஒன்றிய பொறியாளர் கார்த்திகேயன், நில அளவையர் தேவிகா, கிராம நிர்வாக அலுவலர் சத்யராஜ், ஊராட்சி செயலர்கள் முதலூர் ராம்குமார், சாஸ்தாவிநல்லூர் சொந்தூர்பாண்டி, விவசாய நலச்சங்க செயலாளர் லூர்துமணி, செயற்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், அருள்ராஜ், விவசாயி விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: