×

முசிறி பார்வதிபுரத்தில் கிடப்பில் போடப்பட்ட தார் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

முசிறி, நவ.6: முசிறி பார்வதிபுரத்தில் தார்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.முசிறி பார்வதிபுரத்தில் இரண்டாவது மற்றும் அதனை ஒட்டியுள்ள தெருக்களில் தார் சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டது. இதற்காக பழைய சேதமடைந்த தார் சாலை பெயர்க்கப்பட்டு சற்று சாலையை உயரப்படுத்தி சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றது. ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தார் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இது குறித்து முசிறியை சேர்ந்த சமூக ஆர்வலர் முருகன் என்பவர் கூறுகையில், முசிறி பார்வதிபுரத்தில் தார் சாலை அமைப்பதற்காக துவங்கப்பட்ட பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குவியல் குவியலாக கிடக்கிறது. இதில் நடந்து செல்வதற்கும் சிரமமாக உள்ளது. வாகனங்களில் செல்வதற்கும் சிரமமாக உள்ளது. இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் டயர்களின் விளிம்பில் ஜல்லிக்கற்கள் போவோர் வருவோர் மீது தெறிக்கிறது. இதில் படுகாயமடைந்து உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே சாலை அமைக்கும் பணியை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று கூறினார்.தார் சாலை பணிகள் துவங்கப்பட்டு ஜல்லிக்கற்கள் மற்றும் மண் செட்டாக வேண்டும் என சில நாட்கள் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் நினைத்திருந்த நிலையில் மாதக்கணக்கில் தார்சாலை பணி கிடப்பில் போடப்பட்டதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.


Tags : Muziris ,public ,tar road ,
× RELATED கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள்...