×

தா.பேட்டை-முசிறி சாலை வனப்பகுதி முன்பாக பாதுகாப்பின்றி திறந்து கிடக்கும் ஆழ்துளை கிணறு மூட நடவடிக்கை எடுக்கப்படுமா?

தா.பேட்டை, நவ.7: தா.பேட்டையிலிருந்து முசிறி செல்லும் சாலை வனப்பகுதி முன்பாக வயல்வெளியில் திறந்து கிடக்கும் ஆழ்துளை கிணற்றை மூடுவதற்கு ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் திறந்து கிடந்த போர்வெல் குழியில் சுஜித்வில்சன் என்ற 2 வயது சிறுவன் விழுந்தான். பல வகைகளில் முயற்சித்தும் சிறுவனை உயிரோடு மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு நிலத்தில் உள்ள கைவிடப்பட்ட போர்வெல்கள் அனைத்தும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பயன்பாட்டிலுள்ள போர்வெல்கள் பாதுகாப்பான முறையில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தா.பேட்டை ஒன்றியத்தில் கைவிடப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போர்வெல்கள் மூடப்பட்டது. இருப்பினும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மூடப்படாத போர்வெல்கள் காணப்படுகிறது. மேலும் தனியார் நிலங்களில் போடப்பட்ட போர்வெல்கள் இன்னும் மூடப்படாத நிலையிலும் பயன்பாட்டிலுள்ள போர்வெல்கள் உரிய பாதுகாப்பு இல்லாமலும் உள்ளது. தா.பேட்டையில் இருந்து முசிறி செல்லும் சாலையில் வனப்பகுதியின் முன்பாக நிழற்குடை அருகே உள்ள வயலில் ஆழ்துளை கிணறு மூடாமல் பாதுகாப்பின்றி காணப்படுகிறது. இதனை மூடுவதற்கு தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : road forest area ,Pettah-Musiri ,
× RELATED விலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை: மாவட்ட வன அலுவலர் பேட்டி