×

உரத் தட்டுப்பாட்டை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சாயல்குடி, நவ.7: கடலாடி தாலுகாவில் உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தடையின்றி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கடலாடி தாலுகாவின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. 5 வருடங்களாக தொடர் வறட்சியால் விவசாயம் பொய்த்து போனது. இதனால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் தாலுகா முழுவதும் உள்ள விவசாய நிலங்கள், கண்மாய், பண்ணைக்குட்டை போன்றவற்றில் ஓரளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் விவசாயிகள் நெல், மிளகாய், சிறுதானிய பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர். பயிர்கள் நன்கு முளையிட்டு வளர்ந்த நிலையில் கூலியாட்கள் மூலம் களை எடுத்து வருகின்றனர். பயிர் நன்றாக வளர்வதற்கு அடி உரம் மற்றும் உரம் இடப்படுகிறது. ஆனால் கடலாடி தாலுகாவில் யூரியா போன்ற உரங்கள் போதியளவு கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் உரமின்றி அலைகழிக்கப்பட்டு வருவதாக புகார் கூறுகின்றனர்.

எனவே கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் தடையின்றி உரம் வழங்க வேண்டும். 2018-19ம் ஆண்டிற்கான பயிர்காப்பீடு இழப்பீடு தொகை வழங்கப்பட்டதில் விடுவிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடன் வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சிக்கலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மயில்வாகணன் முன்னிலை வகித்தார். கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் பச்சைமாள் வரவேற்றார். விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மாதர்சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜனநாய வாலிபர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED விவசாயிகள் ஏமாற்றம் பிரம்மரிஷி...