கருவேல மரங்களை அகற்றாததால் கண்மாய்க்கு தண்ணீர் வருவதில் சிக்கல் விவசாயிகள் குற்றச்சாட்டு

சாயல்குடி, நவ.7:  சாயல்குடியில் பொதுப்பணி துறை கண்மாயில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற ஏலம் விடப்பட்டும் அகற்றாததால், தற்போது பெய்த மழைக்கு கண்மாய், ஊரணியில் தண்ணீர் பெருக வழியில்லாமல் வீணாகி வருவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். சாயல்குடியில் பொதுப்பணித்துறை கண்மாய் சுமார் 250 எக்டேர் பரப்பளவில் உள்ளது. எம்.கரிசல்குளம், கூரான்கோட்டை, பிள்ளையார்குளம், எஸ்.கீரந்தை, இருவேலி, சாயல்குடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம விவசாய பாசன பகுதியுடன் இணைந்துள்ளதால் சுமார் 5க்கும் மேற்பட்ட பாசன கண்மாய்கள் பயனடைந்து வருகிறது.  இக்கண்மாய்க்கு மழை காலங்களில் சங்கரதேவன் கால்வாய், நாராயண காவிரி, குண்டாறு மற்றும் மலட்டாறு கால்வாய்களில் இருந்து பெருக்கெடுத்து ஓடி வரும் காட்டுவெள்ளத்தால் கண்மாய் பெருகி வருவது வழக்கம். ஆனால் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கண்மாய் ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கி தவிக்கிறது. வரத்துகால்வாய் மற்றும் கண்மாயில் 80 சதவீதத்திற்கு மேல் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. மண் மேடுகளால் கண்மாய் மற்றும் கால்வாய்கள் தூர்ந்து போய் கிடக்கிறது.

தற்போது பெய்து வரும் மழைக்கு காட்டுபகுதியில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வந்தும் தண்ணீர் தேங்குவதற்கு வழியில்லாமால் மழைநீர் வழிந்தோடி வீணாகி வருகிறது. இந்த கண்மாய் மடை வழியாக சாயல்குடி பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ஊரணிக்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். இதில் தண்ணீர் பெருகினால், இப்பகுதி மக்கள் குளிப்பதற்கு, துணிகள் சலவை செய்வதற்கு, இறுதி சடங்குகள் செய்வதற்கும் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் கண்மாயிலுள்ள 4 பாசன மடைகள், மதகுகள், ஷட்டர்கள் சேதமடைந்து உள்ளது. இதனால் ஊரணிக்கு தண்ணீர் வர வழியில்லாமல் ஊரணி நிரம்பாமல் உள்ளது.

இந்நிலையில் கண்மாயிலுள்ள சீமை கருவேல மரத்தை வெட்ட ரூ.4 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டதாக கூறப்படுகிறது. ஏலம் விடப்பட்டதில் முறைகேடு இருப்பதால் சீமை கருவேல மரங்கள் அகற்றப்படாமல் இருப்பதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். கண்மாய் கரை ஆக்கிரமிப்பு மற்றும் கரையை சேதப்படுத்தியது தொடர்பாக பொதுப்பணி துறை மற்றும் தாலுகா, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள், பலமுறை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வரவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே சாயல்குடி கண்மாயிலுள்ள சீமை கருவேல மரங்கள், ஆக்கிரமிப்புகளை உடன் அகற்ற வேண்டும். கண்மாய், ஊரணியில் தண்ணீர் பெருக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சாயல்குடி மற்றும் 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : non-removal ,
× RELATED கண்களில் உண்டாகும் காயங்கள்