×

சிசிடிவி கேமராக்கள் அமைப்பதில் தாமதம்

தர்மபுரி, நவ.7: தர்மபுரி நகரில் போக்குவரத்தை கட்டுப்படுத்த சிசிடிவி கேமராக்கள் அமைப்பதில் தாமதமாகி வருவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், வாகனங்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 2012ம் ஆண்டு, நகரின் முக்கிய சந்திப்பான நான்குரோட்டில் தனியார் பங்களிப்புடன் ரவுண்டானாவை சீரமைத்து, போக்குவரத்தை கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது. இதை தொடர்ந்து நகர் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தனியார் நிறுவனங்கள் போதிய ஒத்துழைப்பு தராததால், அந்த திட்டம் பாதியிலேயே நின்றுவிட்டது. பெருகி வரும் வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப, தர்மபுரி போக்குவரத்து பிரிவில் போதிய போலீசார் இல்லை. இதனால் முக்கிய சந்திப்புகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்நிலையில், பாப்பாரப்பட்டி, காரிமங்கலம், அரூர், தொப்பூர், பாலக்கோடு, அதியமான்கோட்டை காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஆனால், மாவட்டத்தின் தலைமையிடத்தில் உள்ள டவுன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்துவதில் தாமதம் நிலவி வருகிறது. எனவே, தர்மபுரி நகரில் போக்குவரத்தையும், சாலையில் நடக்கும் குற்றங்களை கண்காணிக்கவும் ராமாக்காள் ஏரி முதல் நான்குரோடு, அரசு மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம், ஒட்டப்பட்டி வரையும், மதிகோன்பாளையம் முதல் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு வரையிலும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகளை, போலீசார் விரைவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED வடசென்னையில் 64 நவீன சிசிடிவி கேமராக்கள்