வானொலி நிலையத்தில் தர்மபுரி எம்பி ஆய்வு

தர்மபுரி, நவ.7: தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் இயங்கி வரும் அகில இந்திய வானொலியின், தர்மபுரி பண்பலை வானொலி நிலைய நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு செய்யப்படுவதை, தற்போது இரவு 11.05 மணி வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், வானொலி நிலையத்தில், நேர நீட்டிக்கப்பட்ட நிகழ்ச்சி ஒலிபரப்பு மற்றும் செயல்பாடுகளை தர்மபுரி எம்பி டாக்டர் செந்தில்குமார் நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டார். நிகழ்ச்சி ஒலிபரப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து, நிருபர்களிடம் எம்பி செந்தில்குமார் கூறியதாவது: தர்மபுரி பண்பலை வானொலி நிலையம் மூலம் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகள், இப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளன.

இந்நிகழ்ச்சிகளின் நேரத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், கடந்த மாதம் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் நேரில் சந்தித்து கோரிக்கையை முன் வைத்தேன். இதையடுத்து, இந்த மாதம் முதல் தேதியிலிருந்து தர்மபுரி அகில இந்திய வானொலி பண்பலை நிகழ்ச்சிகளை, இரவு 11.05 மணிவரை நேர நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அகில இந்திய வானொலியில் நிகழ்ச்சி அமைந்துள்ளது. இந்த பண்பலையின் ஒலிபரப்பு நேரத்தை நீட்டிப்பு செய்ததற்கு, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேபோல, தர்மபுரி மாவட்டத்தில், அரூர், பென்னாகரம் மலைப்பகுதிகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் வானொலி ஒலிபரப்பு சேவை தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். அப்போது தர்மபுரி வானொலியின் நிகழ்ச்சி பொறுப்பாளர் முரளி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Dharmapuri ,MP Study ,Radio Station ,
× RELATED தர்மபுரி வானொலி நிலையம் ஒலிபரப்பு நேரம் நீட்டிப்பு