அரசு மருத்துவமனையில் மருத்துவர், பணியாளர் பற்றாக்குறை

சோழவந்தான், நவ. 7: சோழவந்தான் அரசு மருத்துவமனையில் மருத்துவர், பணியாளர் பற்றாக்குறையால், நோயாளிகள் உரிய சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.சோழவந்தானில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நகர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தினசரி சுமார் 600 புறநோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். 30 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையால் உரிய சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர்.தலைமை மருத்துவர் உள்ளிட்ட 7 மருத்துவர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் 5 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். குறிப்பாக குழந்தை மருத்துவர் இல்லை. தற்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். பணியாளர், மருத்துவர் பற்றாக்குறையால் மருத்துவம் பார்க்கவும், மாத்திரைகள் வாங்கவும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.

மேலும், மாற்றுப்பணிக்கு இங்கிருந்து வேறு ஊர்களுக்கு மருத்துவர்கள் அனுப்பப்படுகின்றனர். தற்செயல் விடுப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பல நாட்கள் ஒரு மருத்துவர் மட்டும் பணியில் இருக்கும் சூழல் ஏற்படுகிறது. ஒரு மருந்தாளுனர், மூன்று மருத்துவப்பணியாளர்கள், ஒரு எக்ஸ்ரே பணியாளர், இரவுக் காவலர், பிரேதப் பரிசோதனை பணியாளர் என குறைந்த எண்ணிக்கையிலேயே பணியாளர்கள் உள்ளனர். தனி எக்ஸ்ரே அறை, உபகரணங்கள் இருந்தும் பணியாளர் இல்லை. பிரேதப் பரிசோதனைக்கு பணியாளர் பற்றாக்குறை உள்ளது. இதனால், வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் இருந்து பணியாளர்கள் வந்து செல்கின்றனர்.இப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளம் மற்றும் நான்குவழிச்சாலை விபத்தில் சிக்கி இறப்பவர்களின் உடல்களை கொண்டு வருகின்றனர். மறுநாள் பிரேதப் பரிசோதனை செய்யும் வரை, உடலை பாதுகாக்க
குளிர்சாதன அறை அல்லது பெட்டி உள்ளிட்ட வசதிகள் இல்லை.துப்புறவு பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதாரம் கேள்விக் குறியாகிறது.குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு அதிகம் நோய் தாக்குதல் ஏற்படுகிறது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க, குழந்தை மருத்துவர் இல்லாததால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவலநிலை உள்ளது.எனவே, சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள், பணியாளர்களை நியமிக்க, சம்மந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : doctor ,government hospital ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது