×

வத்தலக்குண்டு அருகே கொரியர் நிறுவனத்தில் கைவரிசை காட்டிய 5 பேர் கைது திருடிய செல்போனில் ‘சிம் போட்டதால் சிக்கினர்’

பட்டிவீரன்பட்டி, நவ. 7: வத்தலக்குண்டு அருகே கொரியர் நிறுவனத்தில் பணம், பொருட்களை கொள்ளையடித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். திருடிய செல்போனில் சிம் போட்டு பயன்படுத்தியதால் சிக்கினர்.வத்தலக்குண்டு அருகே திண்டுக்கல் மெயின்ரோடு லயன்ஸ் நகரில் ஆன்லைனில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும்பொருட்களை பணத்தை பெற்று கொண்டு அவர்களின் வீடுகளுக்கு நேரிடையாக கொடுக்கும் தனியார் கூரியர் நிறுவனம் உள்ளது. இங்கு கடந்த அக்.14ம் தேதி வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர், செல்போன், ஆடைகள், அழகுசாதனங்கள் என சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ரூ.85 ஆயிரம் பணம் திருடு போனது. இதுகுறித்து நிறுவனமேற்பார்வையாளர் நவீன்குமார் அளித்த புகாரின்பேரில் பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டதால் நம்மை யாரும் கண்டுபிடிக்க முடியாது என நினைத்து திருடிய செல்போன்களை அக்கும்பல் சிம் கார்டு போட்டு பேசியுள்ளனர். இதுசெல்போனின் இஎம்இஐ எண் வாயிலாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதை வைத்து இருப்பிடத்தை தேடிய போது அது பட்டிவீரன்பட்டி அருகே அய்யன்கோட்டையை காண்பித்துள்ளது. மேலும் அப்பகுதியை சேர்ந்த மருதீஸ்வரன் (28), இளங்கோவன் (45), 19 வயதுடைய 2 பேர், 18 வயதுடைய ஒருவர் என 5 பேர் கொரியர் நிறுவனத்தில் கொள்ளையடித்தது தெரிந்தது. மேலும் விசாரணையில் சேவுகம்பட்டி கள்ளர் பள்ளியில் பூட்டை உடைத்து அறிவியல் ஆய்வு கூடத்திலிருந்த நுண்ணோக்கி, மோடம் உள்ளிட்ட பொருட்களையும் திருடியது தெரிந்தது. இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த செல்போன், வாட்ச், கேமரா மற்றும் பள்ளியில் திருடிய பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 5 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : courier company ,Wattalakundu ,
× RELATED நைஜீரியாவில் பயங்கரம் கைகளை கட்டி கழுத்தறுத்து 110 விவசாயிகள் படுகொலை