×

திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பாண்டு மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.375 கோடி கடன் இலக்கு

திண்டுகக்ல், நவ. 7: திண்டுக்கல் மாவட்டத்தில் 2019-2020ம் நடப்பு நிதியாண்டு மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.375 கோடி கடன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வங்கியாளர்களுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது.இப்பயிற்சியில் கலெக்டர் 3 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.21 லட்சத்திற்கான வங்கி கடனுதவி வழங்கிய பின் அவர் தெரிவித்ததாவது:-மகளிர் சுயஉதவி குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வங்கி கடன்கள் பெரிதும் உதவுகின்றது. மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்குவதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 2016-2017, 2017-2018 நிதியாண்டுகளில் 100 சதவீதமும், 2018-2019-ஆம் நிதியாண்டில் 68 சதவீதமும் மாவட்ட இலக்கின் மீது சாதனை எய்தப்பட்டுள்ளது. 100 சதவீதம் இலக்கினை அடைவதில் வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடன் திருப்பம் 100 சதவீதம் இருக்க வேண்டும் என்பதற்காக வட்டி மானியம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் உருவாக்கப்பட்ட குழுக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது, குழு மக்களிடையே கடனை நாணயத்துடன் திருப்பி செலுத்த வழிவகை செய்யும். வங்கி கிளை மேலாளர்கள் தலைமையில் மக்கள் அமைப்புகளை உள்ளடக்கிய கடன் திருப்ப கண்காணிப்புக்குழு கிளை வாரியாக அமைக்கப்பட்டுள்ளது. இது 100 சதவீதம் கடன் திருப்பம் செய்வதனை உறுதி செய்யும்.

மேலும், 2019-2020ம் நிதியாண்டிற்கு தமிழக அரசால், திண்டுக்கல் மாவட்ட மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.375 கோடி கடன் இலக்கு நிர்ணயம் செய்து, வழங்கப்படுவதில் நாளது தேதி வரை ரூ.178.24 கோடி மட்டுமே எய்தப்பட்டுள்ளது. இது மொத்த இலக்கீட்டில் 48 சதவீதம் மட்டுமே ஆகும். எஞ்சியுள்ள 58 சதவீதம் இலக்கான ரூ.197 கோடியை வருகின்ற 31.01.2020க்குள் எய்திட வேண்டும். கடந்த ஆண்டுகளில் 100 சதவீதம் இலக்கினை எய்திட வங்கியாளர்கள் உதவியதுபோல் நடப்பு ஆண்டிலும் 100 சதவீதம் இலக்கை எய்திட குழுக்களுக்கு அதிகளவு கடன் வழங்க வேண்டும். மகளிர் சுயஉதவி குழுக்கள் தொடர்பாக ஆர்பிஐ சார்பில் வெளியிடப்படும் பிரதான சுற்றறிக்கைகளை வங்கியாளர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன், வங்கி கடன் வழங்குவதில் உள்ள இடர்பாடுகளை பரஸ்பர கலந்துரையாடல் மூலம் நீக்கவும், நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்திற்கான இலக்கினை வரும் காலாண்டிற்குள் முழுமையாக எய்திடவும், தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம், முதன்மை மாவட்டமாக திகழ, மகளிர் திட்ட அலுவலர்களும், வங்கியாளர்களும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றார். .இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திண்டுக்கல் மாவட்ட இணை இயக்குநர் சந்தோஷ்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் (கனரா வங்கி) மாரிமுத்து, மாவட்ட தொழில் மையம் பொதுமேலாளர் மருதப்பன் மற்றும் அனைத்து வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : self-help groups ,Dindigul district ,
× RELATED கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை