×

இரு உழவர் சந்தைகளில் சிறு வியாபாரிகள் ஆதிக்கம்

திருப்பூர், நவ.7: திருப்பூர் வடக்கு, தெற்கு ஆகிய இரு உழவர் சந்தைகளின் நிர்வாக அலுவலர்கள் உரிய நேரத்திற்கு வராததால் காய்கறிகளின் விலைப்பட்டியல் எழுதுவதற்குள் சிறு வியாபாரிகள் மொத்தமாக காய்கறிகளை வாங்கிச்செல்வதால் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படுகிறது.திருப்பூர்-பல்லடம் ரோடு தென்னம்பாளையத்திலும், பெருமாநல்லுார் ரோடு புது பஸ் ஸ்டாண்ட் அருகே என இரு இடங்களில் உழவர் சந்தை செயல்படுகிறது. இரு சந்தைகளுக்கும் திருப்பூர் மாநகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களான கோவில் வழி, அருள்புரம், நல்லுார், செவந்தபாளையம், அல்லாலபுரம், நொச்சிபாளையம், மங்கலம்,  அணைப்பாளையம், முதலிபாளையம், பெருமாநல்லுார், நெருப்பெரிச்சல்  உட்பட 100க்கு மேற்பட்ட கிராமங்களிலிருந்து  விவசாயிகள் தங்களுடைய  விளைநிலங்களிலுள்ள காய்கறிகளை அறுவடை செய்து உழவர் சந்தைகள்  மற்றும் மொத்த காய்கறி சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

 திருப்பூர் மாநகர், மங்கலம், அவநாசி, பல்லடம், நல்லுார் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோர், காய்கறி கடைகள், மளிகை கடைகளைச்சார்ந்த ஆயிரக்கணக்கான  சிறு வியாபாரிகள் அதிகாலையிலேயே  உழவர் சந்தைகள், மொத்த காய்கறி சந்தைக்கு சிறு வியாபாரிகள் வந்து மொத்தமாக வாங்கி பல்வேறு கிராமங்களில் சில்லரை விலையில் விற்பனை செய்கின்றனர். சிறு வியாபாரிகள் மொத்தமாக உழவர் சந்தைக்கு வருவதால் காய்கறிகளின் விலைப்பட்டியல் எழுதும் முன்பே விவசாயிகளிடம் நேரடியாக வியாபாரிகள் விலை பேசி மொத்தமாக வாங்கிச்செல்வது வழக்கமாக உள்ளது.  இது குறி்தது கண்காணிக்க வேண்டிய நிர்வாக அலுவலர்கள் உழவர் சந்தையின் வேலை நேரமான அதிகாலை 3.30 மணிக்கு அலுவலகத்திற்கு வருவது இல்லை. உழவர் சந்தைகளில் வேலை பார்க்கும் கடை நிலை ஊழியர்களே அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டிய நிலை உள்ளது. உழவர் சந்தைகளில் காய்கறிகள் கிடைப்பது இல்லையென பொது மக்கள் புகார் கூற சம்பந்தப்பட்ட நிர்வாக அலுவலர்கள் இல்லாததால் கடை நிலை ஊழியர்களிடம் முறையிடுகின்றனர். திருப்பூர் மாநகர் பகுதியில் இரு இடங்களில் இயங்கும் உழவர் சந்தைகளுக்கு அதிகாலை 3.30 மணிக்கு  மாவட்ட கலெக்டர் தீடீர் ஆய்வு நடத்தி வேலை நேரத்திற்கு வராத நிர்வாக அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு அனைத்து காய்கறிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : traders ,
× RELATED கோயம்பேடு சந்தையை தூய்மைப்படுத்தும்...