×

வரத்து குறைவால் கடும் தட்டுப்பாடு பெரிய வெங்காயம் விலை விரைவில் குறையும்

கோவை, நவ. 7: கோவையில் பெரிய வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், வெங்காயத்தின் விலை படிப்படியாக குறையும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கோவை மேட்டுப்பாளையம் சாலையில் எம்.ஜி.ஆர். மார்க்கெட், பெரிய கடைவீதி தியாகி குமரன் மார்க்கெட் என 2 மார்க்கெட்கள் உள்ளன. இந்த மார்க்கெட்டிற்கு மகாராஷ்டிரா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் வரத்து உள்ளது. தினமும் 700 முதல் 800 டன் வரை பெரிய வெங்காயம் வரத்து இருக்கும். இந்நிலையில், மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையின் காரணமாக வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் பாதிப்பு நாடு முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. கோவைக்கு வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. தினமும் 400 டன் மட்டுமே வரத்துள்ளது.

இதனால், நடப்பாண்டில் முதல் முறையாக பெரிய வெங்காயத்தின் விலை கோவை மாவட்டத்தில் கடந்த 3ம் தேதி உச்சத்தை தொட்டது. அதன்படி, மொத்த விற்பனையில் கிலோ ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விற்பனையில் ரூ.90க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று முதல் பெரிய வெங்காயம் வரத்து சற்று அதிகரித்துள்ளது. இதனால், மொத்த விற்பனையில் கிலோ ரூ.55க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை வரும் வாரங்களில் படிப்படியாக குறையும் வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது குறித்து பெரிய வெங்காய வியாபாரிகள் கூறுகையில், “மகாராஷ்டிரா, கர்நாடகாவில் வெங்காயம் விளைச்சல் நன்றாக இருந்தது. ஆனால், செப்டம்பர் முதல் பெய்து வரும் மழையினால் 70 சதவீதம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும், தீபாவளி விடுமுறை, மழை உள்ளிட்ட காரணத்தினால் வெங்காயம் வரத்து குறைந்து விலை உயர்ந்தது. கடந்த 3ம் தேதி கிலோ ரூ.70 முதல் ரூ.65க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது ரூ.15 வரை பெரிய வெங்காயம் விலை குறைந்துள்ளது. அதன்படி, நேற்று மொத்த விற்பனையில் கிலோ ரூ.55க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், வரும் வாரங்களில் வெங்காயத்தின் விலை படிப்படியாக குறையும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், வெங்காயம் தொடர்பான மத்திய அரசின் கட்டுப்பாடு தமிழகத்திற்கு தேவையற்றது” என்றனர்.

Tags :
× RELATED புதுக்கோட்டை அருகே சிறுமி நரபலி...