×

அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வர தடை

கோவை, நவ. 7: கோவை அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் இளநீர் கொண்டுவர மருத்துவமனை நிர்வாகம் தடைவிதித்துள்ளது. மேலும், மருத்துவமனை எதிரேயுள்ள கடைகளில் நடத்திய ஆய்வில் 100 கிலோ பிளாஸ்டிக் கவர்களை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கேரளாவில் இருந்து தினமும் 7,500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். தவிர, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் மற்றும் நோயாளிகளுடன் தங்கும் நபர்கள் பெரும்பாலானவர்கள் மருத்துவமனையின் எதிரில் உள்ள கடைகளில் இருந்து உணவு பொருட்களை வாங்கி கொண்டு வருகின்றனர். இந்த பொருட்களை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களில் போட்டு அளிக்கின்றனர்.

நோயாளிகள், உறவினர்கள் உணவுகளை சாப்பிட்டு முடித்தவுடன் பிளாஸ்டிக் கவர்களை மருத்துவமனை வளாகத்தில் போட்டுவிட்டு செல்கின்றனர். சிலர் கழிவறையில் போடுகின்றனர். மேலும், இளநீரை குடித்து விட்டும் மருத்துவமனை வளாகத்தில் தூக்கி வீசி செல்கின்றனர். பொதுமக்களின் இந்த செயல்களினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கடைகளில் விற்பனை செய்யப்படும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் குழுவினர் நேற்று மருத்துவமனை எதிரேயுள்ள கடைகளில் ஆய்வு நடத்தினர்.

அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் 100 கிலோ இருந்தது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர். இது குறித்து மருத்துவமனையின் டீன் அசோகன் கூறுகையில், “மருத்துவமனை வளாகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது. மேலும், இளநீர் கொண்டு வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாத்திரங்களில் கொண்டு வரலாம். பொதுமக்களின் அலட்சியம் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள், நோயாளிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.

Tags : Government ,
× RELATED தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில்...