×

இயன்முறை பயிற்சி மையத்தில் முழுநேரப் பயிற்சியாளர் இல்லாததால் மாற்றுத்திறனாளிகள் அவதி

கோவை, நவ. 7: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் செயல்படும் இயன்முறை பயிற்சி மையத்தில் முழுநேரப் பயிற்சியாளர் இல்லாததால் மாற்றுத்திறனாளிகள் முழுமையாக பயிற்சிப் பெற முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர்.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மாற்றுத்திறனாளிக்கு பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் வீல்சேர், ஊன்றுகோல், காதொலிக் கருவி, கண்ணாடி உள்பட பல வகையான உபகரணங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. இதனிடையே கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயிற்சிப் பெறும் வகையில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இயன்முறை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இயன்முறை மருத்துவப் பயிற்சியாளர்கள் மூலம் பல்வேறு வகையானப் பயிற்சிகள் இதில் வழங்கப்பட்டு வருகின்றன. பேச்சுப் பயிற்சியும், குழந்தைகளுக்கான செவித்திறன் குறைபாடு கண்டறியும் தொடக்க நிலை பரிசோதனை மையமும் இங்கு செயல்பட்டு வருகின்றன. அதே போல் பயிற்சி மையத்தில் தசைப்பயிற்சிக்கான உபகரணங்களும், மின்னணு உபகரணங்களும் உள்ளன. இதில், பெரும்பாலான மின்னணு உபகரணங்கள் போதிய பராமரிப்பில்லாமல் பழுதாகி உள்ளன. பயிற்சி மையத்தில் முழுநேரப் பயிற்சியாளர் இல்லாததால் மாற்றுத்திறனாளிகள் முழுமையாகப் பயிற்சிப் பெறுவதில் சிரமம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மாற்றுத்திறனாளி ஒருவர் கூறுகையில், ‘‘பயிற்சியாளர்கள் சில சமயங்களில் வார முடியாத சூழ்நிலையால் இயன்முறை பயிற்சிப் பெற முடியாமல் மாற்றுத்திறனாளிகள் திரும்பிச் செல்லும் நிலை காணப்படுகிறது. கோவை மாவட்டத்தின் கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி செல்ல வேண்டியுள்ளது’’ என்றார். இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த அலுவலகத்தில் இயன்முறை பயிற்சி மையத்தில் 21 மாற்றுத்திறனாளிகள் பயிற்சிப் பெற்று வருகின்றனர். இவர்களில் தினமும் 6 முதல் 8 பேர் வரை இங்கு வந்து செல்கின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளிக்கும் தொழில்நுட்ப அலுவலர்களே அலுவலகப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால், முழுநேரம் பயிற்சியளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.  மாற்றித்திறனாளிகள் பதிவு, நலத்திட்டப் பணிகள் என கூடுதல் பணிகளால் அலுவலர்களுக்கும் பணிச்சுமை கூடுதலாக உள்ளன. பயிற்சி மையத்துக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கானப் பயிற்சிகளும் தேவைக்கேற்ப வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : trainer ,Physical Training Center ,
× RELATED துரோணாச்சார்யா விருது பெற்ற தடகள பயிற்சியாளர் திடீர் மறைவு