கருங்கல்பாளையத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் ஆய்வு

ஈரோடு, நவ. 7: ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் மாநகராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கலெக்டர் கதிரவன், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையிலான அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். டெங்கு கொசுப்புழு உற்பத்திக்கான காரணிகள் இருந்தது தொடர்பாக அபராதம் விதிக்கப்படுவதுடன் அதை சுத்தப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கருங்கல்பாளையம் ரங்கபவன் பகுதியைச் சேர்ந்த சங்கர் மகள் ஜெயஸ்ரீ (19). இவர், கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு கருங்கல்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து, ரங்கபவன் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையிலான அதிகாரிகள் இந்த பகுதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

Advertising
Advertising

அப்போது, அங்கு டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் கிடந்த பழைய டயர்களை அப்புறப்படுத்தினர். டெங்குப்புழு உற்பத்திக்கான காரணிகள் இருந்தது தொடர்பாக 26 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,` ரங்கபவன் பகுதியில் 2 மருத்துவ குழுக்கள் மூலமாக தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஒரு குழு மூலம் அப் பகுதி மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. டெங்கு கொசு உற்பத்திக்கு வழிவகை செய்யும் வகையில் இருந்த மாட்டுக் கொட்டகை மற்றும் வீடுகளுக்கு 26 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு தொடர்ந்து 3 நாட்களுக்கு கொசுமருந்து அடிக்கும் பணிகளும், சுகாதார பணிகளும் மேற்கொள்ளப்படும்’ என்றனர்.

Related Stories: