×

கிராம ஊராட்சிகளில் 2097 வார்டுகளுக்கான இட ஒதுக்கீடு விவரம் வெளியீடு

ஈரோடு, நவ. 7: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 கிராம ஊராட்சிகளில் உள்ள 2097 வார்டுகளுக்கான இட ஒதுக்கீடு விபரம் குறித்து மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 3,665 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.இதில், 3363 பதவிகளுக்கு நேரடியாக தேர்தல் நடைபெற உள்ளது. 302 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, மாநகராட்சி மேயர், மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சி தலைவர், நகராட்சி கவுன்சிலர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி கவுன்சிலர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் மற்றும் பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய பதவிகள் நேரடியாக தேர்தல் நடத்தப்படுகிறது.

மாநகராட்சி துணை மேயர், நகராட்சி துணை தலைவர், பேரூராட்சி துணை தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர், யூனியன் தலைவர்கள், யூனியன் துணை தலைவர்கள், பஞ்சாயத்து துணை தலைவர்கள் ஆகியோர் கவுன்சிலர்கள் ஓட்டு போட்டு மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில் வார்டு வரையறை வகுக்கப்பட்டதையடுத்து ஆண், பெண் வார்டுகள் பிரிக்கப்பட்டு உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலும் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் உள்ள வார்டுகள் இட ஒதுக்கீடு தொடர்பாக மாவட்ட அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 225 கிராம ஊராட்சிகளில் 2097 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில், எந்தெந்த வார்டில் பழங்குடியினர், ஆதிதிராவிடர் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட அரசிதழில் அதிகாரப்பூர்மாக நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ஊராட்சிகளின் பெயர், வார்டுகளின் எண்ணிக்கை, ஊராட்சியில் உள்ள குக்கிராமம், வார்டில் உள்ள வீதிகள், வீட்டு கதவு எண் உள்ளிட்ட விபரம் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட இட ஒதுக்கீட்டு அறிக்கை ரத்து செய்யப்பட்டு மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் கடந்த முறை வெளியிடப்பட்ட இட ஒதுக்கீடு படி இந்தமுறை வார்டுகள் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED சென்னையில் 34 வார்டுகளில் தான் கொரோனா...