கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலம் பர்னிச்சர் கடை ஊழியர் மர்மச்சாவு

ஈரோடு, நவ.7: ஈரோட்டில் பர்னிச்சர் கடை ஊழியர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு மாரப்பா 3வது வீதியில் பர்னிச்சர் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 15 பேர் வேலை செய்து வருகின்றனர். இதில், 6 பேர் வெளியூர்களை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முத்தலக்குறிச்சியை சேர்ந்த பூபேஸ் (52) என்பவர் கடந்த 10 மாதமாக இந்த பர்னிச்சர் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை அவர் தங்கியிருந்த அறையில் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதைப்பார்த்து பக்கத்து அறையை சேர்ந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து உடனடியாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி, பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் விசாரணை மேற்கொண்டார்.

பக்கத்து அறைகளில் தங்கியிருந்த ஊழியர்களிடமும் விசாரித்தார். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை ஆய்வு செய்தனர். திருமணமான பூபேஸ்சிற்கு சந்தோஷ் (20) என்ற மகன் உள்ளார். இவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். குடும்பத்தை விட்டு பிரிந்து ஈரோடு வந்த பூபேஸ், இந்த பர்னிச்சர் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வேலை முடித்து அறைக்கு திரும்பிய பூபேஸ் நேற்று அதிகாலை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். அருகிலேயே கழுத்தை அறுக்க பயன்படுத்திய கண்ணாடி துண்டு கிடந்தது. இவரை யாராவது கொலை செய்தார்களா? அல்லது  சொந்த பிரச்சனை காரணமாக தன்னைத்தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்த விபரம் ஏதும் தெரியாமல் இருந்தது. இதுபற்றி பூபேசின் மகன் சந்தோஷிற்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் கோவையில் இருந்து ஈரோடு வந்தார். போலீசார் சந்தோஷிடம் விசாரித்தனர். விசாரணையில் குடும்ப பிரச்னை காரணமாக  பூபேஸ் கழுத்தை அறுத்துக் கொண்டதாக தெரிகிறது. எனினும் இது குறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: