×

கண்ணமங்கலம் அருகே பயங்கரம் வீட்டில் தனியாக வசித்த ஆசிரியை சரமாரி குத்திக்கொலை

* காஸ் திறந்துவிட்டு சடலத்தை எரிக்க முயற்சி * காவல் நாயும் கொல்லப்பட்ட பரிதாபம்

கண்ணமங்கலம், நவ.7: கண்ணமங்கலம் அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரியை கொடூரமாக குத்திக்கொலை செய்யப்பட்டதுடன், பீரோவை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் அடுத்த முனியந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் லூர்து மேரி(65), ஓய்வு பெற்ற ஆசிரியை. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் முனியந்தாங்கல் பஸ் நிறுத்தம் அருகே தனது சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டுக்கு இருபுறமும் கடைகள் அமைந்துள்ளன.இந்நிலையில், லூர்துமேரி நேற்று காலை நீண்டநேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது, வழியில் ஆசிரியை லூர்துமேரி வளர்த்து வந்த நாய், வாசலில் பலத்த ரத்த காயத்துடன் கொடூரமான முறையில் இறந்து கிடந்தது. மேலும், ஆங்காங்கே ரத்தம் சிதறி கிடந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, லூர்துமேரி சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டும், தலையில் கடுமையாக வெட்டப்பட்டும் நாற்காலியில் அமர்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். வீடு மற்றும் சுவற்றில் ஆங்காங்கே ரத்தக்கறைகள் கிடந்தது. மேலும் பீரோவும் திறந்து கிடந்தது.
பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. சமையல் அறையில் இருந்து காஸ் கசிவின் வாசம் இருந்தது. மேலும் காஸ் சிலிண்டர் தொடங்கி சேலை ஒன்று தரையில் போடப்பட்டு பாதி எரிந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து உடனடியாக கிராம மக்கள் சந்தவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், ஏடிஎஸ்பி அசோக்குமார், டிஎஸ்பிக்கள் செந்தில், குணசேகரன், இன்ஸ்பெக்டர்கள், ஜெயப்பிரகாஷ், விநாயகமூர்த்தி, சப்- இன்ஸ்பெக்டர் தரணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், லூர்துமேரி தனியாக வசிப்பதை அறிந்த மர்ம ஆசாமிகள் நள்ளிரவில் வீட்டில் நுழைந்து, அவரை சுவற்றில் மோதியும், தலையில் கத்தியால் வெட்டியும், கத்தியால் சரமாரியாக குத்தியும் கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து அதன் பணம், நகைகளை கொள்ளையடித்துள்ளனர். தொடர்ந்து சடலத்தை தரதரவென ஹாலுக்குள் இழுத்து வந்த அவர்கள் அங்கிருந்த நாற்காலியில் சடலத்தை அமர வைத்துள்ளனர். பின்னர் சமையல் அறைக்கு சென்று சமையல் காஸை திறந்து விட்டு, ஆசிரியையின் சேலை ஒன்றை எடுத்து வந்து சுருட்டி சிலிண்டரில் இருந்து சடலம் அருகில் வரை தரையில் வைத்து தீ வைத்து தப்பி சென்றுள்ளனர். இதனால் கொல்லப்பட்ட ஆசிரியை சடலத்தை அவர்கள் எரித்து கொன்று விபத்து போல் நாடகமாட திட்டமிட்டிருந்ததும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால் சேலையில் சிறிது தூரம் தீபிடித்து அணைந்துள்ளது.இதையடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் கார்த்தீசன், விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் ஆங்காங்கே சிதறி கிடந்த ரத்த மாதிரிகளை சேகரித்தனர். மேலும், மோப்ப நாய் மியாவை வரவழைத்து துப்பு துலக்கப்பட்டது. சாலையில் சிறிது தூரம் ஓடிய நாய் பின்னர் நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதுகுறித்து சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிந்து, லூர்துமேரியை கொடூரமாக கொலை செய்த நபர்கள் யார்? நகை, பணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது ஏதேனும் முன்விரோதம் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, ஆசிரியை தனியாக வசித்து வந்ததை நன்கு அறிந்தவர்கள்தான் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளனர். நாயை கொன்று விட்ட பிறகே வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். இதனால் ஆசிரியை நாய் வளர்த்து வருவதை அறிந்தே அவர்கள் வந்துள்ளனர். இவர்களை பார்த்து நாய் குரைத்ததும் முதலில் அதை அடித்துக் கொன்றுள்ளனர். அதன் பின்னர் ஆசிரியை கொல்லப்பட்டுள்ளார். கொள்ளை போன நகை, பணம் குறித்த தகவல்கள் அவர்களது உறவினர்கள் வந்தால்தான் தெரியும்.
ஆனால் அவரது உறவினர்கள் அனைவரும் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். அவரது தம்பி ஒருவர் மட்டுமே வெளியூரில் உள்ளார். அவர் வந்த பிறகுதான் பிற விவரங்கள் தெரியவரும் என்று தெரிவித்தனர். வீட்டில் தனியாக இருந்த ஆசிரியை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கண்ணமங்கலம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Teacher ,death ,terror house ,Kannamangalam ,
× RELATED கணவருக்கு கொரோனா என சந்தேகம்: ஆசிரியை தற்கொலை