×

பெரியபாளையம் அருகே மாட்டுத்தொழுவமான ரேஷன் கடை

ஊத்துக்கோட்டை, நவ. 7: பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் மாட்டுத்தொழுவமாக மாறிய ரேஷன் கடையை சீரமைக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள ஊராட்சி அலுவலகம் அருகில் கும்மிடிப்பூண்டி  முன்னாள் எம்.எல்.ஏ சி.எச்.சேகர், தொகுதி மேம்பாட்டு நிதியில் ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது.  இதில், அப்பகுதியை சேர்ந்தவர்கள் அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய்  உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாங்கி வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேஷன் கடையின் பின்புறம் உள்ள சுவர் சேதமடைந்து விட்டது. இதையொட்டி அருகில் உள்ள சின்னகாலனிக்கு ரேஷன் கடை மாற்றப்பட்டது. அங்கு சென்று குடும்ப அட்டை தாரர்கள் பொருட்களை வாங்கி வருகின்றனர். இதனால், பயன்பாடில்லாமல் மூடியே கிடக்கும் ரேஷன் கடையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் தங்களின் மாடுகளை கட்டியுள்ளார்கள். இதனால், அந்த பகுதியில் சுகாதாரகேடு ஏற்பட்டள்ளது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் பழுதடைந்த  ரேஷன் கடை கட்டிடத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Beef shop ,Periyapayam ,
× RELATED மார்த்தாண்டத்தில் மாட்டிறைச்சி கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்