விதியை மீறி அதிக பள்ளி குழந்தைகளை ஏற்றிய 1,275 ஆட்டோ டிரைவர்கள் மீது வழக்கு

சென்னை: விதிகளை மீறி அதிக எண்ணிக்கையில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆட்களை ஏற்றி சென்றதாக 1,275 ஆட்டோ ஓட்டுனர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், தொடர்ந்து விதிகளை மீறினால் ஆட்டோ பறிமுதல் செய்து உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆட்டோக்களில் போக்குவரத்து விதிகளை மீறி அதிகளவில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆட்களை ஏற்றி செல்வதாகவும், இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக தொடர் புகார்கள் வந்தது. இதையடுத்து போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் உத்தரவுப்படி மாநகரம் முழுவதும் போக்குவரத்து போலீசார் ேநற்று முன்தினம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த சிறப்பு தணிக்கையில் போக்குவரத்து விதிகளுக்கு புறம்பாக அதிக எண்ணிக்கையில் பள்ளி குழந்தைகள் மற்றும் ஆட்களை ஏற்றி சென்றதாக 1,275 ஆட்டோ ஓட்டுனர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

Advertising
Advertising

மேலும், விதி மீறலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இனி வரும் காலங்களில் இது போன்று அதிகளவிலான குழந்தைகளை ஆபத்தான முறையில் ஏற்றி செல்ல கூடாது எனவும் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை செய்தனர். மேலும் ஆட்டோக்களில் பள்ளி குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்களுக்கும், பள்ளி நிர்வாகத்தினருக்கும் சென்னை போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறி ஆட்டோக்களில் அதிகளவில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆட்களை ஏற்றி சென்றால் சம்பந்தப்பட்ட ஆட்டோக்கள் பறிமுதல் செய்து உரிமத்தையும் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து போலீசார் ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

Related Stories: