×

அதிகபாரம் ஏற்றி கொண்டு குடிபோதையில் அதிவேகமாக லாரிகளை இயக்கும் டிரைவர்களால் அடிக்கடி விபத்து

கூடுவாஞ்சேரி, நவ.7: ஊரப்பாக்கம் - நல்லம்பாக்கம் மற்றும் மேலைக்கேட்டையூர் - கல்வாய் சாலையில் அதிக பாரம் ஏற்றி கொண்டு, குடிபோதையில் அதிவேகமாக லாரிகளை இயக்கும் டிரைவர்களால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையில் நடமாட முடியாமல் அச்சப்படுகின்றனர். இதனை அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கும், 14 கிமீ தூரம் கொண்ட ஊரப்பாக்கம் - நல்லம்பாக்கம் சாலை மாநில ஊரக நெடுஞ்சாலைத் துறையின் கட்டுபாட்டில் உள்ளது. இதேபோல், வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் தொடங்கி கூடுவாஞ்சேரி - நெல்லிக்குப்பம் சாலையில் முடிவடையும். மேலைக்கோட்டையூர் - கல்வாய் சாலை 10 கிமீ கொண்டது. இந்த சாலைகளில் மதூர், செட்டிபுண்ணியம், வாலாஜாபாத், பண்ருட்டி, குன்னவாக்கம், உத்திரமேரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து சக்கை கற்கள், ஜல்லி கற்கள் ஆகியவற்றை 90 டன் எடைக்கு மேல் அதிக பாரத்துடன் ஏற்றி கொண்டு ஊரப்பாக்கம் - நல்லம்பாக்கம் சாலையோரத்தில் உள்ள கீரப்பாக்கம் மற்றும் நல்லம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இயங்கும் கிரஷர்களுக்கு லாரிகளில் கொண்டு செல்கின்றனர்.

அங்கு, அதனை அரைத்து பொடியாக்கி, கீரப்பாக்கம் மற்றும் நல்லம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் எம்சாண்டு, தார் பிளான்டு மற்றும் சிமென்ட் கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். மேலும், இங்கிருந்து சென்னை உள்பட புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கும் ஆயிரக்கணக்கான லோடுகள் ஏற்றி செல்கின்றனர். இதில், லாரிகளை இயக்கும் டிரைவர்கள் 18 வயதுக்கு குறைந்தவர்களாக அதிகளவில் உள்ளனர். பல டிரைவர்கள் மது குடித்துவிட்டு போதையில் லாரிகளை அதிவேகமாக இயக்குகின்றனர். இதனால், அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். ஊரப்பாக்கம், காரணைப்புதுச்சேரி, காட்டூர், அருங்கால், கீரப்பாக்கம், முருகமங்கலம், நல்லம்பாக்கம், மல்ரோசாபுரம், கண்டிகை, மேலைக்கோட்டையூர், அம்மணம்பாக்கம், மேட்டுப்பாளையம், குமிழி, ஒத்திவாக்கம், கல்வாய் உள்பட 15க்கும் மேற்பட்ட கிராங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலைகளில் நடமாட முடியாமல் தினமும் உயிர் பயத்தில் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

இதனை தட்டி கேட்கும் பொதுமக்களை, லாரி டிரைவர்கள் மிரட்டுகின்றனர். இதில், 24 டயர்கள் பொருந்திய ராட்சத லாரிகளில் 90 டன்னுக்குமேல் லோடுகளை ஏற்றிகொண்டு வருவதால், கடந்த 10 மாதங்களுக்கு முன் ₹5 கோடியில் அமைக்கப்பட்ட மேலைக்கோட்டையூர் - கல்வாய் சாலை குண்டும், குழியுமாக மாறிவிட்டது. மேலும், அதிக பாரம்ஏற்றிகொண்டு தறிக்கெட்டு ஓடும் லாரிகளால் சாலையில் புழுதி பறக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், சுவாச கோளாறு, மூச்சு திணறல் ஏற்படுகிறது. பைக் ஓட்டிகள், அரசு பஸ்களில் செல்லும் பயணிகளும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டு கொள்ளவில்லை. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : accidents ,drivers ,
× RELATED ஊரடங்கு காலத்தில் சாலை...