×

தண்டராம்பட்டு அருகே துணிகரம் டிரைவர் வீட்டில் 40 சவரன், ₹2 லட்சம் திருட்டு

தண்டராம்பட்டு, நவ.6: தண்டராம்பட்டு அருகே அரசு பஸ் டிரைவர் வீட்டில் 40 சவரன் மற்றும் ₹2 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.
திருவண்ணாமலை அடுத்த மழுவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தசரதன்(54), அரசு பஸ் டிரைவர். இவரது தாயார் ஜெயலட்சுமி(75). இவர் வீட்டின் அருகே பழங்களை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் தசரதன் கடந்த 3ம் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்றிருந்தார். மூதாட்டி ஜெயலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை அவர் வீட்டை பூட்டிவிட்டு பழங்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். வேலை முடிந்ததும் நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் தசரதன் வீட்டிற்கு வந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தது. மேலும், அதிலிருந்து 40 சவரன் நகைகள் மற்றும் ₹2 லட்சம் திருட்டு போனது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தசரதன் வாணாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து மர்ம ஆசாமிகள் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது.மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Tags : house ,theft ,Dandarampattu ,
× RELATED தாராபுரம் என்.ஜி.ஜி.ஓ. காலனியில் வீரமணி...