×

காட்டுப்பன்றி தாக்கி 2 பேர் படுகாயம் நரிக்குடி அருகே பரபரப்பு

திருச்சுழி, அக். 23 : நரிக்குடி அருகே, விவசாய நிலத்தில் காட்டுப்பன்றி தாக்கியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். நரிக்குடி அருகே, நாலூர், கட்டனூர் மற்றும் அதனைச் சுற்றிய பகுதி விளைநிலங்களில் நெல், கடலை, பருத்தி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இப்பகுதியில் காட்டுப்பன்றிகள் விளைபயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. மேலும், விவசாயிகளையும் தாக்கி வருகின்றன. இந்நிலையில், நாலூரைச் சேர்ந்த கணபதி மகன் முத்துபாண்டி (25), அதே ஊரைச் சேர்ந்த செல்வம் மகன் ராஜ்குமார் (24) ஆகியோர், கண்மாய் வழியாக விவசாய நிலத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது புதர்பகுதியில் மறைந்திருந்த காட்டுப்பன்றி திடீரென இருவர் மீதும் பாய்ந்தது. இதில், கீழே விழுந்த முத்துப்பாண்டியின் கால்களை கடித்து குதறியது. ராஜ்குமார் விரட்ட முயன்றபோது, அவரது கை விரலை கடித்துக் குதறியது. இருவரும் கூச்சலிட்டதால், அக்கம்பக்கத்தில் இருந்த விவசாயிகள் ஓடி வந்து காட்டுப்பன்றியை விரட்டி, இருவரையும் மீட்டனர். முத்துப்பாண்டி மதுரை அரசு மருத்துவமனையிலும், ராஜ்குமார் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். காட்டுப்பன்றி நடமாட்டத்தால் விவசாயிகள் விளைநிலங்களுக்கு செல்ல அச்சப்படுகின்றனர். மேலும், காட்டுப்பன்றியின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை நடக்காவிடில் விரைவில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

Tags : Wild boar attacks ,Nerikkudi ,
× RELATED நரிக்குடி பகுதியில் மழையின்றி வளரும் கண்மாய்கள்: கால்நடை வளர்ப்போர் கவலை