×

சாலைக்கிராமம் அருகே பயிர் இன்சூரன்ஸ் 25 சதவீதம் அறிவிப்பு

இளையான்குடி, அக். 23: சாலைக்கிராமம் அருகே பயிர் இன்சூரன்ஸ் குறித்த கலெக்டரின் குறைந்த அளவு சதவீத அறிவிப்பால், விவசாயிகள் சாலை மறியல் செய்ய முயற்சி செய்தனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2018-2019ம் ஆண்டு இளையான்குடி பகுதியில் போதிய மழை இல்லாததால், நெல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனால் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் பதிவு செய்ய மாவட்ட நிர்வாகத்தின் பேரில் அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் விவசாயிகள் அனைவரும் தங்களது நில ஆவணங்களின் பேரில் இன்சூரன்ஸ் பதிவு செய்தனர். தற்போது இளையான்குடி பகுதியில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட 2018-19ம் ஆண்டிற்குரிய பயிர் இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படுவதாகவும், புதுக்கோட்டை வருவாய் குரூப்பிற்கு 25 சதவீதம் வழங்க இருப்பதாகவும், மாவட்ட நிர்வாக தரப்பில் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.அதற்கு புதுக்கோட்டைவருவாய் குரூப்பிற்கு உட்பட்ட புதுக்கோட்டை, பஞ்சனூர், வருந்தி, நன்னியாவூர் ஆகிய கிராமங்களில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மற்ற வருவாய் குரூப்பைப்போல இன்சூரன்ஸ் தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும் என, கடந்த வாரம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காததால், நேற்று சாலைக்கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட குழு அழகர்சாமி, தாலுகா தலைவர் சந்தியாகு, மாநில துனைத் தலைவர் முத்துராமு ஆகியோர் தலைமையிலும் மற்றும் பாதிக்கப்பட்ட கிராம விவசாயிகள் சார்பில் சாலை மறியல் செய்ய கூடியிருந்தனர்.தகவலறிந்த வருவாய்த்துறையினர், வேளாண்மைத்துறையினர் மற்றும் காவல்துறையினர் போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்து, கலெக்டருக்கு நேரடியாக எடுத்துரைக்கப்படும் என கூறியதல் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர். குறைந்தளவு இன்சூரன்ஸ் சதவீத அறிவிப்பை கன்டித்து சாலை மறியல் செய்ய திரண்டு வந்த விவசாயிகளால் சாலைக்கிராமம் பகுதியில் சுமார் மூன்று மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Roadside ,
× RELATED சென்னை மாநகராட்சியில் இரு சக்கரம்...