×

காளையார்கோவிலில் யூனியன் அலுவலக சாலையில் மழைநீர் தேக்கம்

காளையார்கோவில், அக். 23: காளையார்கோவிலில் யூனியன் அலுவலகம் செல்லும் சாலையில் மழைநீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். காளையார்கோவிலில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் 43 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த அலுவலகத்துக்கு செல்லும் சிமெண்ட் சாலை பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. அப்போது மதுரை-தொண்டி நெடுஞ்சாலை தாழ்வாக இருந்ததால், யூனியன் அலுவலக சாலையில் மழைநீர் தேங்கவில்லை. தற்போது மதுரை-தொண்டி சாலை உயரமாக அமைக்கப்பட்டதால், தாழ்வாக உள்ள யூனியன் அலுவலகம் செல்லும் சாலையில் மழைநீர் தேங்குகிறது. இதில், கொசுக்கள் உருவாகி பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சுகாதாரக்கேட்டை உருவாக்கும் அவலம் உள்ளது. இப்பகுதியில் கூட்டுறவு வங்கி, ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம், காளையார்கோவில் ஊராட்சி அலுவலகம் ஆகியவை உள்ளன. 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளன. யூனியன் அலுவலக சாலையை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சாலையை சீரமைக்க அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை.இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்தபோது, எங்களது பிரச்னைகள் குறித்து அவர்களிடம் தெரிவித்தால், உடனடியாக தீர்த்து வைத்தனர். தற்போது எங்கள் தெருவில் குடிநீர் பிரச்னை, சாலை வசதி, கழிவுநீர் பிரச்னை ஆகியவை உள்ளன. யாரிடம் தெரிவிப்பது என தெரியாமல் உள்ளோம். அனைத்து அதிகாரிகளும் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் யூனியன் அலுவலகம் செல்லும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : office road ,Union ,Kaliyarikovil ,
× RELATED மத்திய அமைச்சரவை செயலர்...