×

பயிர்காப்பீடு தொகை வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

சாயல்குடி, அக். 23: 2017-2018 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என காக்கூர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டதில் கடந்த 2017-18 ஆம் ஆண்டிற்கான வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, தேசிய பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் பிரிமீயம் செலுத்தியிருந்தனர். அதன்படி மாவட்டத்தின் பெருவாரியான பகுதியினருக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுவிட்டது. தற்போது 2018-19ம் ஆண்டிற்காக பயிர்காப்பீடு இழப்பீடு தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதுகுளத்தூர் தாலுகா காக்கூர், பெரியகையகம், அனிஉருந்தல், கோடையரேந்தல், பொக்கனரேந்தல், பொன்னக்னேரி ஆகிய பகுதி விவசாயிகளுக்கு 2017-18ம் ஆண்டிற்கான பயிர்காப்பீடு இழப்பீடு தொகையில் 25 சதவீதம் அளவிற்கே வழங்கப்பட்டதாகவும், மீதமுள்ள தொகை இன்னும் வழங்கவில்லை. இதனால் விவசாயம் செய்ய வாங்கிய கடனை கட்டமுடியாமல் அவதிப்படுவதாக கூறுகின்றனர். மேலும் தற்போது நல்ல மழை பெய்தும் விவசாய பணிகளை செய்ய போதிய பணம் இன்றி கஷ்டப்படுவதாக கூறுகின்றனர்.  பயிர்காப்பீடு இழப்பீடு தொகை கேட்டு பலமுறை கலெக்டரிடம் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இழப்பீடு தொகை முழுமையாக கிடைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை