×

பரமக்குடியில் உள்ள எரிவாயு தகன மேடையில் சடலம் எரிக்க அதிக கட்டணம் வசூல்

பரமக்குடி, அக்.23: பரமக்குடியில் மஞ்சன்பட்டினம் பகுதியில் நகராட்சியால் நிர்வகிக்கப்பட்டுள்ள எரிவாயு  தகனமேடையில் சடலம் எரிக்க அதிக பணம் வசூல் செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பரமக்குடியில் கடந்த 2012-13ம் ஆண்டில் ரூ.1 கோடி செலவில் புதிதாக எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி தொடங்கியது. தனகமேடை அமைக்கும் போது இந்து மத சடங்குகளுக்கு எதிராக தகனமேடை அமைக்கப்பட்டதாக பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனை சரிசெய்ய கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குறைகள் சரிசெய்யப்பட்டு தகனமேடை திறக்கப்பட்டது. ஆனால், சடலத்தை எரிக்க வரும் நபர்களிடம் கூடுதல் பணம் வசூல் செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. சிவகங்கை, காரைக்குடி, மதுரை போன்ற ஊர்களில் உள்ள எரிவாயு தகனம் செய்ய ரூ.800 முதல் ரூ.1000 வரை மட்டுமே வசூல் செய்யபடுகிறது. ஆனால், பரமக்குடியில் கூடுதலாக ரூ.400 முதல் ரூ.800 வரை  இறந்தவர்களின் பொருளாதாரத்திற்கு ஏற்ப பலித்தமட்டும் பணம் வசூல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுநல அமைப்புகள் நகராட்சி மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். அதேபோல், உடலை எரிக்க வரும் உறவினர்கள் பயன்படுத்த கழிப்பறை வசதிகள் இல்லாமல் வெளிபுறங்களை அசிங்கம் செய்து வருகின்றனர். இதனால் தகனமேடைக்கு அருகே துர்நாற்றம் வீசுகிறது.  அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் ஜெனரேடர் இல்லாமல்  தகனம் செய்வதில்  காலதாமதம் ஏற்படுகிறது. பல மணிநேரம் காத்திருந்து அஸ்தியை பெற்று செல்லவேண்டிய நிலை உள்ளது. பரமக்குடி நகராட்சி நிர்வாகம் ஜெனரேட்டர் வசதி செய்துகொடுக்கவும், இறந்தவர்களின் உறவினர்களிடம் அதிக பணம் வசூல் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பராமரிப்பு இல்லாமல் கடற்கரையோரம்...