×

மருத்துவமனை முன்பு பட்டாசு வெடித்தால் அபராதம்

திண்டுக்கல், அக். 23: மருத்துவமனை முன்பு பட்டாசு வெடித்தால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அபராதம் விதிக்கப்படும் என விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம், பள்ளிக்கல்வித்துறை சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு விபத்தில்லா, மாசு இல்லாத தீபாவளி விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பேரணியை துவக்கி வைத்து கலெக்டர் விஜயலட்சுமி பேசியதாவது, ‘தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பள்ளி கல்வித்துறை, உள்ளுர் நிர்வாகம் மற்றும் அரசு சாரா அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து பல்வேறு பண்டிகை காலங்களில் ஏற்படும் மாசினை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. தீபாவளி பண்டிகையின் போது ஏற்படும் ஒலி, காற்று மாசினை குறைக்கும் வகையில் பள்ளி- கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பொதுமக்களிடையே துண்டுபிரசுரம் விநியோகித்தல், பட்டாசு உபயோகிக்கும் கால அளவை எடுத்துரைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்கலாம். திறந்தவெளிகள், பொதுஇடங்களில் கூட்டாக பட்டாசுகளை வெடிக்கலாம். குடிசைகள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் இருக்கும் இடங்களில் வானவெடிகளையும், ராக்கெட் வெடிகளையும் வெடிப்பதை தவிர்க்கவும்.

குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்காமல் பெரியவர்கள் உடன் இருந்து கண்காணிக்க வேண்டும். பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக அருகில் பாத்திரங்களில் தண்ணீர், மணலை தயாராக வைத்து கொள்ள வேண்டும். மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் அமைந்துள்ள அமைதியான பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது. மீறி வெடிப்பவர்கள் காவல் துறையினரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படுவார்கள். அதிக சத்தமுள்ள பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஓசை தற்காலிக செவிட்டு தன்மையையும், தொடர்ஓசை நிலையான செவிட்டு தன்மையையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே நமது கவனக்குறைவினாலும், அலட்சியத்தினாலும், மாசு- விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க அதிக சத்தமுள்ள பட்டாசினை தவிர்த்து விபத்தில்லா தீபாவளி பண்டிகையை அனைவரும் நல்ல முறையில் கொண்டாட வேண்டும் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.தொடர்ந்து பேரணி கலெக்டர் முகாம் அலுவலகதத்தில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதில் தமிழ்நாடு மாசுகட்டுபாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சந்திரசேகரன், உதவிச்சுற்றுச்சூழல் பொறியாளர்கள் சுகுமார், குணசீலன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : hospital ,
× RELATED கடந்த 98 நாட்களாக அமலில் இருக்கும்...