தொடர்மழை எதிரொலி பழநி அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு

பழநி, அக். 23: தொடர்மழையின் எதிரொலியாக பழநி பகுதியில் உள்ள அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டவை. இக்கிராமங்களின் விவசாயம் இப்பகுதியில் உள்ள அணைகளை நம்பியும், அணைகளில் இருந்து நீர்ப்பாசனம் பெறும் கண்மாய்கள், குளங்களை மட்டுமே நம்பியுமே இருந்து வருகிறது. போதிய மழை இல்லாததால் பழநி பகுதியில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து போய் இருந்தன. குளங்கள், கண்மாய்களும் தண்ணீரின்றி வறண்டு போயிருந்தன. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து பழநி பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

Advertising
Advertising

நேற்றைய நிலவரப்படி 80 அடி உயரமுள்ள குதிரையாறு அணையின் நீர்மட்டம் 49.85 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 57 கனஅடி நீர் வருகிறது. 65 அடி உயரமுள்ள பாலாறு- பொருந்தலாறு அணையின் நீர்மட்டம் 46.13 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 611 கனஅடி நீர் வருகிறது. 5 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 66.47 அடி உள்ள வரதமாநதி அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. அணையின் நீர்மட்டம் 66.34 அடியாக உள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக அணைக்கு வரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை பெய்யும் சூழ்நிலை நிலவுவதால் பழநி பகுதியில் உள்ள அணைகள் விரைவில் நிரம்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அணைகள் நிரம்பினால் குளங்களுக்கு நீர்ப்பாசனம் கிடைத்து நிரம்பும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: