ரயிலில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டு சிறை

சேலம், அக்.23: தீபாவளியையொட்டி ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் 3ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படம் என பயணிகளிடம் போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக நகர பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வார்கள். அவ்வாறு செல்லும்போது, பஸ் மற்றும் ரயில்களில் பட்டாசு பார்சல்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி கொண்டு சென்றால், போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதன்பேரில், முதல்கட்டமாக ரயில்வே ஸ்டேஷன்களில் பயணிகளிடம் போலீசார், பட்டாசுகளை எடுத்துச்செல்லக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சேலம் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று, எஸ்ஐ பாலமுருகன் தலைமையிலான போலீசார், பயணிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, ரயில் பயணத்தின் போது, பட்டாசு பார்சல்களை எடுத்துச்செல்லக்கூடாது என அறிவுறுத்தினர். மீறி எடுத்துச்சென்றால் 3 ஆண்டு சிறை, அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது என எச்சரிக்கை செய்தனர்.முதலில், பிளாட்பார்ம்மில் இருந்து பயணிகள் மத்தியில் மெகா மைக் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, சென்னை-கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி பயணிகளிடம் துண்டுபிரசுரங்களை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சில பயணிகளை நிறுத்தி, பட்டாசு பார்சல்கள் எடுத்து வந்துள்ளனரா? என உடமைகளை சோதனையிட்டனர். அடுத்தடுத்த நாட்களில் இந்த சோதனை தீவிரப்படுத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: