தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு கடைகளில் அதிகாரிகள் சோதனை

சேலம், அக்.23: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் இனிப்பு கடைகள், திருமண மண்டபங்களில்  உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள இனிப்பு கடைகள், கார வகைகள் தயாரிக்கும் பணியில் இனிப்பு கடை உரிமையாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இனிப்பு, கார வகைகள் கலப்படம் இல்லமால் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்டத்தில் உணவு பாதுகாப்புதுறை சார்பில் 8 குழுக்கள் அமைக்கப்பட்டு, இந்த குழுவினர் மாவட்டம் முழுவதும் உள்ள  இனிப்பு கடைகளிலும், இனிப்பு தயாரிக்கும் கூடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு கடை மற்றும் திருமண மண்டபங்களில் அதிகளவு இனிப்பு, கார வகைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் உணவு பொருள் தரமானதா? என்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்டத்தில் 8 குழுக்கள் அமைக்கப்பட்டு, கடைகளில் சோதனை செய்து வருகின்றனர்.  இனிப்பு, கார வகைகளை சுத்தமான எண்ணையில் செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட கலரை விட கூடுதலாக கலக்க கூடாது. சுகாதாரமற்ற முறையில் இனிப்பு, கார வகைகள் செய்வது கண்டறியப்பட்டால் அவற்றை மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்புவதுடன், தயாரித்த உரிமையாளர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Related Stories: