×

ஜிஎஸ்டி அதிகாரிகள் என காரில் வந்த கும்பல் மாமூல் கேட்டு வாலிபர் மீது தாக்குதல்

சேலம், அக்.23: சேலத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் எனக்கூறி, காரில் வந்த கும்பல் மாமூல் கேட்டு வாலிபரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அசோக்குமார்(29). இவர், இரும்பாலை 2வது கேட் பகுதியில் உள்ள பழைய இரும்பு மற்றும் அலுமினியம் விற்பனை கடையில் பணியாற்றி வருகிறார். கடந்த இரு தினங்களாக கடைக்கு வரும் ஒரு கும்பல் தாங்கள் ஜிஎஸ்டி அதிகாரிகள் எனக்கூறி தீபாவளி பண்டிகைக்கு மாமூல் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். கடை உரிமையாளர் இல்லாததால், தான் எதையும் கொடுக்க முடியாது என அசோக்குமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம்  கடைக்கு வந்த 4 பேர் அடங்கிய கும்பல, தீபாவளி செலவுக்கு ₹50 ஆயிரம் வரை பணம் வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்ததால், அசோக்குமாரை காரில் ஏற்றிக்கொண்டு அந்த கும்பல் சேலம் அணைமேடு பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர், அங்கு வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இரவு 8 மணிக்கு, அசோக்குமாரை காரில் கொண்டு வந்து இறக்கிவிட்டு சென்றனர். தாக்குதலில் படுகாயமடைந்த அசோக்குமார், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், அசோக்குமாரை தாக்கியவர்கள் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : gangster ,Mamul ,GST officers ,
× RELATED ஏராளமான பக்தர்கள் குவிந்தனர் டீ...