சேலம் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் 75 ஆயிரம் பணியாளர்கள்

சேலம், அக்.23:சேலம் மாவட்டத்தில் டெங்க தடுப்பு நடவடிக்கையில் 100 நாள் ஊரக வேலை திட்ட பணியாளர்கள் 75 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சேலம் மாவட்டத்தில் டெங்கு நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை வகித்து பேசினார். அப்போது, மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை முற்றிலும் தடுக்கும் வகையில் அனைத்து வட்டாரங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், கலெக்டர் பேசியதாவது: ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில் 20 ஒன்றியங்களில் உள்ள 385 ஊராட்சிகளிலும் தீவிர டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை மற்றும் தூய்மை பணிகள்  மேற்கொள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் சுமார் 75,000ற்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்பணிகளை ஆய்வு செய்ய மாவட்ட நிலையிலும், ஒன்றிய அளவிலும் 80க்கும் மேற்பட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, அனைத்து துறை அலுவலர்களும் தொடர் ஆய்வு மேற்கொண்டு டெங்கு தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.கூட்டத்தில், மேட்டூர் சப் கலெக்டர் சரவணன், உதவி கலெக்டர்(பயிற்சி) மோனிகா ராணா, சுகாதார பணிகள் துணை இயக்குநர் நிர்மல்சன், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் முருகன் மற்றும் மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: