மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு உபரிநீர் போக்கி பகுதியில் தண்டோரா போட்டு எச்சரிக்கை

மேட்டூர், அக்.23: மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் 3வது முறையாக 120 அடியை எட்டும் நிலையில், நேற்றிரவு உபரிநீர் போக்கி பகுதியில் தண்டோரா போட்டு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

  கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி அதிகரித்தது. அன்று மாலை விநாடிக்கு 27,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதனால், அன்றைய தினம் 87.40 அடியாக இருந்த நீர்மட்டம் அதிகரித்து, நடப்பாண்டில் முதல் முறையாக செப்டம்பர் 7ம் தேதி மதியம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து, நீரவரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்ததால் சரிந்து வந்த நீர்மட்டம், மீண்டும் செப்டம்பர் 23ம் தேதி இரவு 120 அடியானது. தொடர்ந்து 5 நாட்கள் 120 அடியாக தம் கட்டிய நீர்மட்டம் 30ம் தேதி 119.84 அடியாக குறைந்தது. அன்று முதல் படிப்படியாக சரிந்து வந்த நீர்மட்டம் 3.10.19ம் தேதி 118.82 அடியாக சரிந்த நிலையில், மறுநாள் 4ம் தேதி முதல் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. ஆனால், பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறப்பால் நீர்மட்டம் சரிந்து வந்தது. 10ம் தேதி அணையின் நீர்மட்டம் 116.73 அடியாக இருந்த நிலையில், நீர்வரத்து விநாடிக்கு 18,672 கனஅடியானது. தொடர்ந்து நீர்வரத்து சரிவால் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வந்தது. 12ம் தேதி 115.67 அடியாக இருந்த நீர்மட்டம் 14ம் தேதி 114.40 அடியாகவும், மறுநாள்(15ம் தேதி) 113.78 அடியாகவும் சரிந்தது.

அதேவேளையில், பாசனத்திற்கான தேவை குறைந்ததால் 16ம் தேதி மாலை முதல் நீர்திறப்பு குறைக்கப்பட்டது. அன்று விநாடிக்கு 5000 கனஅடியாக இருந்த நீர்திறப்பு மறுநாள் 17ம் தேதி 2000 கனஅடியாக குறைக்கப்பட்டது. அன்று காலை ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலியாக மறுநாள்(18ம் தேதி) மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்தது. இதனால், நீர்மட்டம் சரிவில் இருந்து மீண்டது. அன்றைய தினம் 114.83 அடியாக இருந்த நீர்மட்டம் மறுநாள்(19ம் தேதி) 116.27 அடியானது. தொடர்ந்து நீர்திறப்பு குறைப்பால், படிப்படியாக அதிகரித்து வந்த நீர்மட்டம் நேற்று(22ம் தேதி) காலை 118.60 அடியானது. அப்போது, விநாடிக்கு 16,239 கனஅடியாக இருந்த நீர்வரத்து, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை வலுத்ததால் இரவு 8 மணிக்கு விநாடிக்கு 27 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால், அணையில் நீர்மட்டம் 119.33 அடியான நிலையில், இன்று(23ம் தேதி) காலை நடப்பாண்டில் 3வது முறையாக அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவான 120 எட்டுகிறது. இதனால், வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 16 கண் மதகு வழியாக உபரிநீர் வெளியேற்ற வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. காவிரி கரையோர மக்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். நேற்றிரவு 10 மணியளவில் மேட்டூர் தங்கமாபுரிபட்டணம் அண்ணாநகர் பகுதியில் விஏஓ வினீத்குமார், ஆர்ஐ நல்லதம்பி முன்னிலையில் தண்டோரா போட்டு பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Related Stories:

>