நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் செயின் பறிப்பு

மணப்பாறை, அக்.23: துவரங்குறிச்சி அருகே நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து 10 பவுன் செயினை பைக்கில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகேயுள்ள செவந்தாம்பட்டியை சேர்ந்தவர் அமலோற்பபுஷ்பம்(55). இவர் நேற்று துவரங்குறிச்சி செல்வதற்காக செவந்தாம்பட்டியிலிருந்து நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது நான்கு ரோடு அருகே மதுரை ரோட்டில் பைக்கில் வந்த இருவர் அமலோற்பவபுஷ்பத்தை வழிமறித்து கீழே தள்ளி விட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலிச் செயின் உள்பட 10 பவுன் செயினை பறித்துக்கொண்டு மாயமாயினர். இதில், பைக்கை ஓட்டிச் சென்றவன் மட்டும் ஹெல்மெட் அணிந்திருந்ததாகவும், பின்னால் உட்கார்ந்திருந்தவன் ஹெல்மெட் அணியவில்லை என தெரிகிறது. தகவலறிந்த துவரங்குறிச்சி போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், வழக்குப்பதிந்து செயின் பறிப்பு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: