திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை மர்ம நபர்கள் துணிகரம்

திருச்சி, அக். 23: திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.திருச்சி வயலூர் ரோடு, குமரன் நகரை சேர்ந்தவர் கார்த்தி(36). சத்திரம் பஸ் நிலைய பகுதியில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் தலைமை மாஸ்டராக உள்ளார். கடந்த 19ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் துறையூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து ஓட்டலுக்கு வந்து வேலை பார்த்த கார்த்தி, 2 நாட்களாக ஓட்டலிலேயே தங்கினார். நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டுக்கு வந்தார். அப்போது கிரில் கேட், முன்பக்க கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்தன. உள்ளே சென்று பார்த்தபோது அலமாரியில் வைத்திருந்த ரூ.1.25 லட்சம் மாயமாகி இருந்தது. இது குறித்து கார்த்தி அளித்த புகாரின் பேரில், அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மற்றொரு கொள்ளை: திருச்சி கே.கே.நகர் நடராஜன் தெருவை சேர்ந்தவர் கோடி(70). இவர் கடந்த 18ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக குடும்பத்துடன் சென்றிருந்தார். இதில் நேற்று முன்தினம் வந்து பார்த்த போது, பூட்டுகள் உடைக்கப்பட்டு கிரில் கேட், முன்பக்க கதவு ஆகியவை திறந்து கிடந்தன. மேலும் பீரோவும் திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த இரண்டரை பவுன் நகை மாயமாகி இருந்தது. வீட்டில் ஆளில்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் பூட்டுக்களை உடைத்து கைவரிசை காட்டி உள்ளனர். இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: