மணல் கடத்தல், பணம் பறிப்பு: குண்டாசில் 3 பேர் கைது

திருச்சி, அக்.23: மணல் கடத்தல், கத்தியை காட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டு 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.தொட்டியம் அருகே உள்ள கொளக்குடி பெட்ரோல் பங்க் அருகில், கடந்த 4ம் தேதி லோடு ஆட்டோவில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணலை ஏற்றிவந்தபோது, அந்த ஆட்டோவை தொட்டியம் போலீசார் பிடித்து கொளக்குடியை சேர்ந்த கணேசன்(35) என்பரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதேபோல் காட்டுபுத்தூர் பகுதியில் காடுவெட்டி மாரியம்மன் கோயில் அருகே கடந்த 7ம் தேதி லோடு ஆட்டோவில் அரசு அனுமதியின்றி மணல் கடத்தியதை போலீசார் கண்டுபிடித்து, ஆட்டோவை ஓட்டிவந்த காடுவெட்டி அருகே கீழவெளிக்காடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி(50) என்பவரை கைது செய்தனர். மேலும் தாத்தையங்கார்பேட்டை கடைவீதியில் கடந்த மாதம் 26ம் தேதி முசிறி மலையப்ப நகரை சேர்ந்த சுதாகர்(40) நடந்து சென்றபோது முசிறி பேரூரை சேர்ந்த ஆனந்த்(29) கத்தியை காட்டி மிரட்டி ரூ.1500ஐ பறித்த வழக்கில் தாத்தையங்கார்பேட்டை போலீசார் ஆனந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து இவ்வழக்கில் கணேசன் மற்றும் சுப்பிரமணி ஆகிய இருவரும் தொடர்ந்து மணல் கடத்தல் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், ஆனந்த் என்பவர் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாலும் திருச்சி எஸ்பி., ஜியாவுல்ஹக் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சிவராசு உத்தரவுப்படி 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் நேற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: