×

மகளிர் குழுவினருக்கு தென்னை நார் கழிவுகளில் உரம் தயாரிக்க பயிற்சி

பள்ளிபாளையம்,அக்.23: பள்ளிபாளையம் ஒன்றியம் சமயசங்கிலி கிராமத்தில் உள்ள மகளிர் குழுவினருக்கு, தென்னை நார் கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரித்து மாடித்தோட்டம் அமைப்போருக்கு விற்பனை செய்யும் தொழில் நுட்பம் குறித்த நேரடி செயல்விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர், பள்ளிபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் அசோக்குமார் ஆகியோர், இந்த பயிற்சியை துவக்கி வைத்தனர். அட்மா திட்ட மேலாளர் ஹேமலதா, பிஜிபி வேளாண்மை கல்லூரி மாணவர்கள் மகளிர் குழுவினருக்கு செயல்விளக்கம் அளித்தனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தேங்காய் பிரிக்கப்பட்ட பின்னர் கிடைக்கும் மட்டைகளில் இருந்து கயிறு, மெத்தை போன்றவை தயாரிக்கப்பட்டு வந்தது. இந்த நார்கள் பிரிக்கப்பட்ட பின்னர் குப்பையாக கிடக்கும் தென்னை கழிவுகளில் இருந்து இயற்கையான உரங்களை தயாரித்து விற்பனை செய்தால், விவசாயிகளுக்கு நல்ல துணை வருவாய் கிடைக்கும். தேங்காய் உரிக்கும் இடங்களிலும், சந்தைகளிலும் தேங்காய் நார் கழிவுகள் கிடைக்கும். இந்த கழிவுகளை சேகரித்து, விவசாயிகள் தாங்களே உரம் தயாரிக்கலாம்.தேங்காய் நார் கழிவுகளை சேகரித்து, அதில் புளுரோட்டஸ், யூரியா போன்றவற்றை பல அடுக்குகளாக அடுக்கி 60 நாட்கள் மாற்றி, மாற்றி வைத்தால் உரம் தயாராகி விடும். இந்த உரத்தில் கரிமச்சத்தும், தழைச்சத்தும் 24:1 என்ற விகிதத்தில் கிடைக்கிறது. இந்த இயற்கை உரம் மாடித்தோட்டம் வைப்போரிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எனவே விவசாயிகள், மகளிர் குழுவினர் இதுகுறித்த பயிற்சி பெற்றால், இனி வரும் காலங்களில் கழிவு என்று ஒன்றையும் வீணாக்காமல் காசாக்கலாம் என்றனர்.

Tags : group ,women ,
× RELATED ஐபோன்களுக்கான கேமரா தயாரிக்க...