×

பள்ளி முதல்வர் மாற்றம் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, அக்.23: கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் முதல்வர் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை ஆவின் மேம்பாலம் அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு எல்கேஜி முதல் பிளஸ்2 வரை வகுப்புகள் செயல்படுகிறது. இந்த பள்ளியில் முதல்வராக பணியாற்றி வந்தவரை நிர்வாகம் இடம் மாற்றம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நேற்று காலை பள்ளியின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான மாணவர்கள் பள்ளி முதல்வரை மீண்டும் பள்ளியில் பணியமர்த்த கோரி  கோஷமிட்டனர்.இதுகுறித்து தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் பள்ளி நிர்வாகிகளிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில், அந்த முதல்வர் இடம் மீண்டும் பணியமர்த்தப்படுவார் என உறுதியளித்தனர். இதையடுத்து மாணவர்கள், பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : School Principal ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் துப்பாக்கி...