இனிப்புகளில் கலப்பட பொருட்களை சேர்த்தால் கடும் நடவடிக்கை

கிருஷ்ணகிரி, அக்.23: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார பண்டங்களில் கலப்பட பொருட்களை உபயோகிக்க கூடாது என கலெக்டர் பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் கார பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொது மக்களுக்கு விநியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனிப்பு மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து மக்களுக்கு வழங்க வேண்டும்.உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்க கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு, விவரச்சீட்டு இடும்பொழுது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதியாகும் காலம், சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம்  2006ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். பொது மக்களும், பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும் போது உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்ட்ட பொருட்களை விவரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்க வேண்டும். இதுகுறித்த புகார்கள் இருந்தால், கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் புகாரளிக்கலாம். புகார் தெரிவிக்க உணவு பாதுகாப்பு துறையின் 9444042322 என்ற வாட்ஸ் அப் எண், கலெக்டர் அலுவலக புகார் எண் 04343-234444 மற்றும் 1077 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED . தீபாவளி பண்டிகைையயொட்டி கோவை ஆவினில்...