×

தர்மபுரி பட்டுவளர்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்

தர்மபுரி, அக்.23: தர்மபுரி பட்டுவளர்ச்சி நிலையத்தில், விவசாயிகளுக்கு வனக்கல்லூரி மாணவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 4ம் ஆண்டு படிக்கும் பட்டுப்புழுவியல் துறை மாணவர்கள் களப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இப்பயிற்சியின் ஒரு பகுதியாக தமிழ்நாடு பட்டு வளர்ச்சி பயிற்சி நிலைய வளாகம், தர்மபுரி மற்றும் ஓசூரில் களப்பயிற்சி மேற்கொண்டனர். மாணவர்கள் ஹரிஹரன், கார்த்திக், சதீஷ், வசந்த், வெங்கடேசன், கார்த்திக் ஆகியோர் விவசாயிகளுக்கு பயிற்சி நிலைய முதல்வர் ரமேஷ் தலைமையில் செயல்விளக்கம் அளித்தனர்.

மல்பெரி நாற்று நடவு செய்யும் முறை, வேர் அழுகல் நோய்த்தடுப்பு முறை, பட்டுப்புழு வளர்ப்பு கழிவுகள் கொண்டு மண்புழு உரம் தயாரித்தல், மண் மூடாக்கு முறை ஆகியவற்றை மத்திய பகுதி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற வந்துள்ள, 72 விவசாயிகளுக்கு செயல்முறை பயிற்சியை மாணவர்கள் வழங்கினர். இயற்கை உரங்களின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அதிக மகசூல் தரும் மல்பெரி ரகங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இயற்கை உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, வேம், அசட்டோபாக்டர் மற்றும் சூடோமோனாஸ் ஆகியவற்றின் பயன் மற்றும் மண்ணிற்கு இடப்படும் விதம் குறித்து விளக்கப்பட்டது. அசோஸ்பைரில்லமானது மண்ணில் நைட்ரஜனின் சேர்க்கையை அதிகரிக்கும், மேலும் பாஸ்போ பாக்டீரியாவானது மண்ணில் உள்ள பாஸ்பரஸ் சத்தை தாவரம் எடுத்துக்கொள்ளும் தன்மையையும் ஊக்குவிக்கிறது. உயிர் உரம் பயன்படுத்துவதால் மண்வளம் பெருகுவதோடு உற்பத்தி செலவும் குறைகிறது என்று விவசாயிகளுக்கு இயற்கை உரப்பயன்பாடு குறித்து விளக்கப்பட்டது.

Tags :
× RELATED தர்மபுரியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஜவுளி பூங்கா திட்டம்