×

குடிநீர் தேவையை பூர்த்தி செய்யக்கோரி அரவக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்தில் திரண்ட பொன்னாவரம் கிராம மக்கள்

அரவக்குறிச்சி, அக். 23: அரவக்குறிச்சி ஒன்றிய பகுதியில் கிராம மக்கள்
குடிநீர் இல்லாததால் மழைநீரை பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. உடனடியாக குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமென்று மனு அளிக்க ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொன்னாவரம் கிராம மக்கள் திரண்டதால் பரபரபரப்பு ஏற்பட்டது.அரவக்குறிச்சி அருகே உள்ள வேலம்பாடி கிராமம் பொன்னாவரம் கிராமத்தில் சுமார் ஒரு மாத காலமாக காவிரி குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் விவசாய தோட்டங்களில் உள்ள கிணறுகளில் தண்ணீர் எடுத்து வரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். தோட்ட கிணறுகளிலும் தற்பொழுது தண்ணீர் குறைவின் காரணமாக தண்ணீர் மறுக்கப்படுவதால் பொதுமக்கள் ஒரு வாரமாக மழை நீரை பிடித்து தற்காலிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் பொன்னாவரம் கிராம மக்கள் திரண்டு அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்து வட்டார வளர்ச்சித்துறை அலுவலர் சுப்பிரமணியிடம் முறையிட்டு உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.

பின்னர் கிராம மக்கள் கூறியது: கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது பெய்து வரும் மழை நீரை பிடித்து வைத்து பயன்படுத்தி வருகிறோம். மேலும் குடிநீருக்காக வயல்வெளிகளில் உள்ள கிணறுகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இன்னும் ஒருசில தினங்களில் நடவடிக்கை மேற் கொள்ளாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றனர்.இதற்கிடையில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாகம்பள்ளி கிராமம் பெத்தான்கோட்டை பிரிவு அருகே உள்ள சாலபாளையம் கிராம மக்கள் 30க்கும் மேற்பட்டோர் ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்ட மோட்டார் பழுதாகியதால் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் வேலைக்குச் செல்லும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டனர்.

Tags : office ,Aravukurichi Union ,
× RELATED கிராம மக்கள் சாலை மறியல்