×

முழு கொள்ளளவை எட்டியதால் அப்பர்பவானி அணை திறப்பு

மஞ்சூர், அக.23:   முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து நேற்று அப்பர்பவானி அணை திறந்து விடப்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள அப்பர்பவானி அணையானது மாவட்டத்தில் பெரிய அணையாக உள்ளது. 210 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி உள்ளிட்ட மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. மஞ்சூர் சுற்றுப்புறங்களில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் அணைக்கு நீர் வரத்து பல மடங்கு அதிகரித்தது. இதனால் நேற்று காலை அப்பர்பவானி அணை முழுக்கொள்ளளவை எட்டியது. இதைத்தொடர்ந்து பகல் 12 மணியளவில் அணை திறந்து விடப்பட்டது. அணையின் 2 மதகுகள் மூலம்  வினாடிக்கு 260 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அவலாஞ்சி மற்றும் குந்தா அணைகளில்  இருந்து 3வது நாளாக  நேற்றும் நீர் வெளியேற்றப்பட்டது.  அப்பர்பவானி அணை திறந்து விடப்பட்டதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அத்திக்கடவு, பில்லூர் பகுதி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.  இதேபோல் கேரளா பகுதிகளான துடுக்கி, முக்காலி, கக்குப்பட்டி, செம்மனூர், தாவளம், சின்டக்கி, ஆனவாய் உள்பட பவானி ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு அகழி, புதூர் பஞ்சாயத்துகளின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

Tags : Opening ,Upparwani Dam ,
× RELATED கொடைக்கானலில் இசேவை மையம் திறப்பு