×

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி நீரை சேமிக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்

ஈரோடு, அக். 23: பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி நீரை சேமிக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. தலைவர் நல்லசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில், நடப்பாண்டில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டி உள்ளது. இனிவரும் உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்படும். இதுதொடர்பாக, பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு தண்டோரா போட்டு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் பாசனத்திற்கான நீர் தேவை இருக்காது. கடந்தாண்டு பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் 16 டி.எம்.சி. தண்ணீர் கடலில் வீணாக கலந்தது. கடலில் வீணாக வடியும் இந்த உபரிநீரை கீழ்பவானி பாசன கால்வாய் மூலமாக கொண்டு வந்து பாசன பகுதிகளில் உள்ள ஏரி, குளம், குட்டை, கண்மாய்களை நிரப்பும் நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் பொதுப்பணித்துறை மேற்கொள்ள வேண்டும்.

பவானிசாகருக்கும், பவானி கூடுதுறைக்கும் இடையில் பவானி ஆற்றின் குறுக்கே 7 இடங்களில் தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேமிக்க முடியும். இதனால், மழைக்காலத்தில் வீணாக கடலில் வடியும் பவானிசாகர் உபரிநீர் காப்பாற்றப்பட்டு தேவைப்படும் நாட்களில் அதை பயன்படுத்த முடியும். மேலும், இந்த நீர்தேக்கங்கள் நிலத்தடிநீர் செறிவூட்டவும் பயன்படும். தமிழக அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி நீரை சேமிக்கும் திட்டத்தினை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், தென்னிந்திய நதிகள் இணைப்பு மக்கள் இயக்க தலைவர் முத்துசாமி, செயலாளர்கள் கனகராஜ், அரங்கசாமி, ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Bhavani River ,
× RELATED சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் 331...