×

வசூல் குறைவு காரணமாக நடத்துனர் இல்லா பஸ்களை குறைக்க திட்டம்

கோவை, அக். 23:அரசு போக்குவரத்து கழகம், கோவை சார்பில் இயக்கப்பட்டு வரும் நடத்துனர் இல்லா பேருந்துகளில் ஒரு சில வழித்தடங்களில் வசூல் குறைவு காரணமாக நடத்துனர் இல்லா பேருந்துகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை - மதுரை, கோவை - சேலம், கோவை - திருச்சி, கோவை - பொள்ளாச்சி, கோவை - மேட்டுப்பாளையம், கோவை - திருப்பூர் என இந்த வழித்தடங்களில் கோவை மண்டலத்தில் சுமார் 40 பேருந்துகள் நடத்துனர் இல்லாமல் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஈரோடு கோட்டம் சார்பில் ஈரோடு - கோவை, ஈரோ 100 என்கிற பெயரில் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சேலம், திருச்சி, மதுரை போன்ற பகுதிகளுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. பேருந்துகளின் இருக்கைகளில் முழுவதுமாக நிரம்பிவிடுகின்றன. ஆனால் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர் வழித்தடங்களில் இருக்கைகள் முழுவதுமாக நிரம்புவதில்லை. இதனால் வசூல் மிகவும் குறைவாக உள்ளது. ஆகையால் இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் நடத்துனர் இல்லா பேருந்துகள் குறைக்க அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை - மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, திருப்பூர் பகுதிகளுக்கு நடத்துனர் இல்லா பேருந்துகளின் இயக்கம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 54 இருக்கைகள் கொண்ட பேருந்துகளில் காலை, மாலை நேரங்களை தவிர மற்ற நேரங்களில் 14 முதல் 17 பயணிகள் மட்டுமே பெரும்பாலும் பயணிக்கின்றனர். இதனால் இந்த வழித்தடங்களில் நடத்துனர் இல்லா பேருந்துகளை காலை , மாலை மட்டும் இயக்க அல்லது குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த வழித்தடங்களில் முக்கிய நிறுத்தங்களில் மட்டும் நிறுத்தி செல்லவும் யோசனை செய்யப்பட்டு வருகிறது,’’ என்றார்.

Tags : conductors ,
× RELATED அரசு பஸ்களில் பாதுகாப்பாக பயணிப்பது...