உக்கடத்தில் மேம்பால பணிக்காக மின் கம்பங்கள் அகற்றும் பணியில் இழுபறி

கோவை, அக்.23: உக்கடத்தில் 215 ேகாடி ரூபாய் செலவில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் 1.9 கி.மீ தூர மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிக்காக கோவை சுங்கம் பைபாஸ் ரோடு, செல்வபுரம் பைபாஸ் ரோட்டில் உள்ள உயர் அழுத்த மின் கோபுரங்கள் மற்றும் தாழ்வழுத்த மின் கம்பங்களை அகற்ற கடந்த 2017ம் ஆண்டில் இருந்து டெண்டர் விடப்பட்டு வருகிறது. இதுவரை டெண்டர் இறுதி ெசய்யப்படவில்லை. தற்போது 7வது முறையாக டெண்டர் விடப்பட்டும் இறுதி செய்யாத நிலையிருக்கிறது. டெண்டர் இறுதி செய்யப்படாவிட்டால் சுங்கம், செல்வபுரம் ரோடு சந்திப்பு பகுதியிலும், ராமர் கோயில் வீதி சந்திப்பு பகுதியிலும் மேம்பால தூண்கள் அமைக்கும் பணி பாதிக்கப்படும் நிலையிருக்கிறது. மின் பணிகளை செய்ய கோவை மண்டல மின் வாரியமும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் நெடுஞ்சாலைத்துறையினர் அனுமதி வழங்கினர். ஆனால் இரு துறையினரும் இந்த பணிகளை ஏற்க முன் வரவில்லை. மின் கோபுர கம்பங்களை அகற்ற, நிலத்தடியில் கேபிள் பதிக்க 8.60 கோடி ரூபாய் ஆன்லைன் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த முறை வெளியான டெண்டரில் ஒப்பந்த நிறுவனத்தின் சார்பில் 27 சதவீத கூடுதல் தொகை கோரப்பட்டது. 3 முதல் 5 சதவீத தொகை கூடுதலாக வழங்க மட்டுமே நெடுஞ்சாலைத்துறைக்கு அதிகாரம் உள்ளது. 27 சதவீத தொகையை வழங்காததால் ஒப்பந்த நிறுவனத்தினர் பணியை ஏற்க முன் வரவில்லை.

ஒவ்வொரு முறையும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை காட்டிலும் 30 சதவீத தொகையை ஒப்பந்த நிறுவனங்கள் கூடுதலாக கேட்கிறது. மின் பணிகளை செய்யும் ஒப்பந்த நிறுவனங்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கிறது. இதன் காரணமாக ஒப்பந்தம் இறுதி செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. மேம்பாலத்தின் தூண்கள் அமைக்கப்பட்டு இணைப்பு கர்டர் அமைக்கப்பட்டு வருகிறது. விரைவாக உயர் மின் கம்பங்களை அகற்றினால் மட்டும், உக்கடம் பஸ் ஸ்டாண்ட் சுற்றுப்பகுதியில் மேம்பால பணியை தடையின்றி நடத்த முடியும். மேம்பாலத்தின் இருபுறமும் இறங்கு பாலம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மின் கம்பங்களை அகற்றினால் மட்டுமே இறக்கு பாலம் அமைக்க முடியும். விரைவில் ஒப்பந்தம் இறுதி செய்யாவிட்டால் பாலம் பணி முடங்கி விடும் நிலையிருக்கிறது.

Related Stories: