ரயில் நிலையத்தில் டிஎஸ்பி திடீர் ஆய்வு

ஈரோடு, அக். 23: ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில்வே டிஎஸ்பி. தலைமையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தீபாவளி நெருங்கும் நிலையில் பயணிகள் அதிகளவில் ரயில்களில் பயணித்து வருகின்றனர். பணம், நகை, விலை உயர்ந்த பொருட்களை ரயிலில் கொண்டு செல்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர், ரயில் பயணிகளிடம் பணம், நகை, பொருட்களை திருடி செல்கின்றனர். இதைத்தடுக்கும் வகையில் ரயில் நிலையங்கள், ரயில்களில் ரயில்வே போலீசார், பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், பயணிகளின் உடமைகளை சோதனை செய்வது, சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாடும் நபர்களை விசாரிப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று ரயில்வே டிஎஸ்பி (கோவை) அண்ணாதுரை ஈரோடு ரயில்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

ரயில்வே போலீசார் 35, சிறப்பு போலீசார் 25, உள்ளூர் போலீசார் 10 பேர் என தீபாவளியையொட்டி பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். ரயில்வே போலீசாருடன் ரயில்வே பாதுகாப்பு படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்ற செயல்கள் நடக்க கூடும் என கண்டறியப்பட்டுள்ள இடங்களில் 24 மணி நேரமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரவு நேரத்தில் வந்து செல்லும் ரயில்களில் தலா இரண்டு போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த இரண்டு பேர் என 4 பேர் பணியாற்றி வருகின்றனர். ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்லப்படுகிறதா என்பது குறித்தும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அண்ணாதுரை கூறினார்.

Tags : DSP outbreak ,train station ,
× RELATED ரயில் படிக்கட்டில் தொங்கினால்...