ஈரோட்டில் டெங்கு புழுக்கள் உற்பத்தி 3 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

ஈரோடு, அக். 23: ஈரோடு மாநகராட்சியில் நேற்று டெங்கு கொசுப்புழு தொடர்பாக கலெக்டர் தலைமையில் நேற்று ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது டெங்கு கொசுப்புழுக்கள் இருந்தது கண்டறியப்பட்டு 3 வீடுகளில் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார். ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் தொடர்ந்து ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் பூட்டி கிடக்கும் வீடுகள், வணிக வளாகங்களில் அதிகாரிகள் குழுவினர் சென்று அங்கு கொசுப்புழுக்கள் உருவாகும் வகையில் காரணிகள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.இதுதுவிர, கலெக்டர் கதிரவன் தினமும் மாநகராட்சி பகுதிகளில் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வின்போது பொதுமக்களிடம் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் மழைநீர் தேங்காமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று ஈரோடு மாநகராட்சி 4வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசுப்புழு தடுப்பு ஆய்வு நடந்தது. இந்த ஆய்விற்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.

இதில், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், உதவி ஆணையர் அசோக்குமார், சுகாதார அலுவலர் ஜாகிர்உசேன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தனர். 4வது மண்டலத்திற்குட்பட்ட பெரியார் வீதி, பழைய காரைவாய்க்கால் கோர்ட் வீதி, நடுமாரியம்மன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது டெங்கு கொசுப்புழுக்கள் அதிகமாக இருந்தது தொடர்பாக 3 வீடுகளின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார். அதன்படி, 3 வீடுகளின் குடிநீர் இணைப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர். மேலும், இந்த பகுதியில் சுகாதாரமற்ற நிலையிலும், கொசுப்புழுக்கள் உற்பத்தி இருந்தது தொடர்பாகவும் பொதுமக்களிடமிருந்து 30 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Related Stories: